Perambalur: Sterilization center for street dogs; Collector’s information!
அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்கவும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் “நாய்கள் கருத்தடை (ABC – Animal Birth Control) மற்றும் தடுப்பூசித் திட்டம்” தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்துதல், வெறிநாய் நோய் (Rabies) பரவாமல் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நாய்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் மற்றும் ஆக்ரோஷமான குணத்தைக் குறைத்தல் போன்றவையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதனடிப்படையில், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் சமூக நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், தெருவில் சுற்றித் திரியும் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை இலவசமாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை செய்யப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களின் காதுகளில் சிறிய ‘V’ வடிவ அடையாளம் இடப்பட்டிருக்கும். இத்தகைய நாய்களை மீண்டும் கருத்தடை செய்யத் தேவையில்லை.
எனவே, கீழப்புலியூரைச் சுற்றியுள்ள பகுதிளில் காது அடையாளம் இல்லாத நாய்கள் இருந்தால், கால்நடை பராமரிப்புத்துறையால் செயல்படுத்தப்படும் சமூக நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையத்திற்கு நாய்களை கொண்டு செல்லலாம். நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அறுவை சிகிச்சை முடிந்து திரும்பும் நாய்களுக்குச் சில நாட்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவற்றின் விரைவான குணமடைதலுக்கு உதவும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 98430 67841 என்ற எண்ணில் கால்நடை மருத்துவர் சிவாவை தொடர்புகொள்ளலாம், என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.