Perambalur: Stone quarry workers submitted a petition to the Collector, urging appropriate action to ensure quarries in the district operate in compliance with regulations.
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு குவாரிகள் இயங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கல்குவாரி சார்ந்த தொழில்களை நம்பியுள்ள ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாஜக மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் கலெக்டர் ஷரண்யாவிடம் கொடுத்த மனுவின் விவரம்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களை நம்பி லாரி உரிமையாளர்கள் கம்ப்ரசர் உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள். கம்பரசர் ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என ஏராளமானோர் பல ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், “களையைப் பிடுங்குகிறோம் என்ற பெயரில் பயிரையும் சேர்த்துப் பிடுங்குவது எப்படி நியாயமாகும்? ஒரு சில இடங்களில் நடைபெறும் விதிமீறல்களைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த குவாரி தொழிலையும் முடக்குவதால், எவ்விதத் தவறும் செய்யாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இன்று கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல லட்சம் ரூபாய் கடன் பெற்று லாரி மற்றும் கம்ப்ரசர் வாகனங்களை வாங்கியவர்கள் மாதத் தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அன்றாட வருமானத்தை இழந்துள்ளனர். இந்தத் தொழிலைச் சார்ந்துள்ள மெக்கானிக், உதிரிபாகக் கடைகள் உள்ளிட்ட பல துணைத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையிலும் தொழிலாளர்களின் வாழ்வாதார அடிப்படையிலும் அணுகி, சட்டவிரோதமாகவும் விதிமீறல்களுடனும் செயல்படும் குவாரிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், அரசின் அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றத் தயாராக உள்ள குவாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு இயங்குவதற்கு தேவையான அனுமதி மற்றும் வழிகாட்டுதல்களை விரைந்து வழங்க வேண்டும்.
மேலும், குவாரி தொழிலை நம்பியுள்ள லாரி உரிமையாளர்கள், கம்ப்ரசர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை ஏற்படுத்தித் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது கோரிக்கை சட்டவிரோத குவாரிகளுக்கு ஆதரவளிப்பது அல்ல: சட்டத்திற்கு உட்பட்டு தொழில் நடைபெறவும்,அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்பதே ங்களது நியாயமான கோரிக்கையாகும். ஆகவே, இக்கோரிக்கையின் அவசரத்தையும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கவுல்பாளையம், எறையூர், கல்பாடி, நெடுவாசல் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் திரளானேர் கலந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.