Perambalur: Strict action against dealers selling fertilizers to farmers at inflated prices; Agriculture Department announcement.
பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும் எனவும், மீறினால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985- இன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 3296 டன் யூரியா, 692 டன்டி.ஏ.பி., 484 டன் பொட்டாஷ் மற்றும் 3256 டன் காம்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது எனவும், மேலும், உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக் கூடாது எனவும், அறிவுறுத்தப்படுகிறது. சில்லரை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும் பொழுது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.
சில்லறை உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் பொழுது கட்டாயமாக ஆதார் அட்டை கொண்டு கை ரேகை பதிவு செய்து உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாக உரம் வழங்கக் கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை நடைபெற்றது கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி இரத்து செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு குற்ற வழக்கு தொடரப்படும்.
விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்க வேண்டும். உரம் வாங்கும் பொழுது உரிய விற்பனை பட்டியல் கேட்டுப் பெறவும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த புகார்கள் இருப்பின், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலரை (பெரம்பலூர்- 8778605216, ஆலத்தூர்-. 8144916148, வேப்பூர்- .8778200570 மற்றும் வேப்பந்தட்டை-. 861076605) செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என வேளாண்துறை தெரிவித்துள்ளது.