Perambalur: Subsidy for Ulamas to Purchase Two-Wheelers — Collector Announces!
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.
ஆதார் அட்டை நகல், வயது சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழ் / பள்ளிச்சான்றுகள்), புகைப்படம், இருப்பிடச் சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எ.ப்.எஸ்.சி குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பள்ளிவாசலில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று சரக வக்ஃபு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்., வாகனம் வாங்குவதற்கான இருசக்கர வாகனத்தின் விலைப்பட்டியல் / விலைப்புள்ளி, உலமாக்கள் (ம) பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2026-ம் தேதிக்குள் மேற்படி ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.