பெரம்பலூர்: கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து வாக்குறுதிகளை காங்கிரஸ் ஆட்சி அமையாததால் தான் நிறைவேற்ற முடியவில்லை; லியோனி!

schedule
2026-02-10 | 03:25h
update
2026-02-10 | 06:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The promises such as waiving education loans and cancelling the NEET exam could not be fulfilled in Tamil Nadu because the Congress party did not form the government at the Centre! Dindigul Leoni’s interview!

பெரம்பலூரில் மாவட்ட திமுக சார்பில் கருத்து கேட்பு மற்றும் கோரிக்கைகள் கேட்பு கூட்டம் கீதா ரெஸ்டாரண்ட் மாடியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன், தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழக பாடநூல் கழக தலைவரும், கட்சி கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டு விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர்களிடம் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர், லியோனி பேசியதாவது: தொண்டு நிறுவனங்களை நடத்த முடியாத சூழலில் அவை நலிவடையும் போது, அவர்களின் சேவைக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, தொண்டு நிறுவனங்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். மாணவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்க மாவட்டம் முழுவதும் ஒரு வலுவான குழு அமைக்கப்பட வேண்டும். போதை பொருட்கள் மாணவர்களுக்கு கிடைப்பதற்கான வழிகளைத் தடுத்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கல்லூரிகளில் நியூரோ சர்ஜன் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் பற்றாக்குறையைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
விவசாயத்தில் பூச்சி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன் பயன்படுத்துவதை அரசு திட்டத்தில் சேர்க்க வேண்டும், விவசாய பாதுகாப்புச் சட்டத்தை விரிவுபடுத்தவும், 61 விளைபொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்யவேண்டும், பெரம்பலூரில் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பாடநூல் கழக குடோன் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. பெரம்பலூரில் மாலை நேர கல்லூரிகளைத் தொடங்க உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடுத்த தேர்தலுக்குள் அரசாணை பெறப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்துவது மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவது குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். கோவில்களுக்கு பட்டா மற்றும் சோலார் மின் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: திமுக அரசு உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தணும்னு சொல்லும்போது ‘இதெல்லாம் கொடுக்க முடியாது, பெண்களுக்கு இலவசப் பயணம் இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமில்லை என அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி கூறினார். ஆனால், தற்போது பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஆண்களுக்கும் இலவசப் பயணம், மகளிர் உரிமை தொகை 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பேன்’னு சொல்றது எல்லாம், “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் பார்க்கப் போறேன்னு” மக்களை ஏமாற்றுகின்ற ஒரு தேர்தல் அறிக்கையாக உள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை” யாக தான் அதிமுக கட்சி உள்ளது. திமுக கூட்டணி கொள்கையின் அடிப்படையிலான ஒரு வெற்றிக் கூட்டணி. திமுகவின் அரசு திட்டங்கள் அனைத்துமே வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் தான்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு கோடியே 30 லட்சம் பெண்கள் பயன் பெறுகிறார்கள். புதுமைப் பெண் திட்டத்தில் மூலம் 5 லட்சம் மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டங்களால் பயனடைந்தவர்கள் கண்டிப்பாக திமுகவிற்குத் தான் வாக்களிப்பார்கள். ஒரு சில ஆசிரியர்கள் அமைப்புகள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுறாங்க. அதற்காக அரசு ஊழியர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்காங்கன்னு சொல்ல முடியாது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதலமைச்சரும் விரைவில் இதைப் பரிசீலனை செய்து தீர்த்து வைப்பார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையதால் தான் தமிழகத்தில்
கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இன்னைக்கு இருக்கிற மத்திய அரசு, மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியையே கொடுக்க மாட்டேங்குறாங்க.

அவங்களுக்குள்ள கூட்டணி இருக்கா இல்லையான்னு உறுதிப்படுத்திக்கிறதுக்காகவே மோடியை மதுரைக்குக் கூட்டிட்டு வர்றாங்க. 2019 ம் ஆண்டிலிருந்தே பிரதமர் மோடி தமிழகம் வந்துகிட்டு தான் இருக்காரு, அவங்க தோத்துக்கிட்டு தான் இருக்காங்க. மோடி ஆயிரம் முறை வந்து ஒவ்வொரு தொகுதியிலும் மீட்டிங் போட்டாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது திமுக கூட்டணி தான் என அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜ்குமார், துரைசாமி, மாநில நிர்வாகிகள் குன்னம் சி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்தின், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, டாக்டர் வல்லபன், ராஜேந்திரன், ஜெகதீஸ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் மகாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு தலைகுனியாது, சட்டமன்ற தொகுதி பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது. அதில் திரளான தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 15:33:16
Privacy-Data & cookie usage: