Perambalur: Two lorries illegally transporting stones from the Nattarmangalam and Irur quarries have been seized!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 10ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் குவாரி தொழிலாளி திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோதூர்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மகன் சக்கரவர்த்தி (45) மண் சரிவில் சிக்கி பலியானார். இன்று இந்த கல்குவாரியில் ஆர்டிஓ அனிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள வெள்ளி மலையில் செயல்படும் கல்குவாரியையும் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மலையிலிருந்து கிரஷருக்கு வந்த ஒரு டிப்பர் லாரியை ஆர்டிஓ மடக்கி பிடித்து சோதனை செய்தார். இதில் வெள்ளிமலை பகுதியில் இருந்து உரிய ஆவணம் இன்றி சோலிங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சோலிங்கற்களுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். இதே போல திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் பகுதியில் தனியார் கிரஷர் அருகே இரூர் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் இருந்து உரிய ஆவணம் இன்றி சோலிங்கற்கள் ஏற்றி வந்த மற்றொரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பாடாலூர் காவல் நிலையத்தில் 2 லாரிகளையும் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.