Perambalur: Two people died in an accident, including one who was hit by a car that then fell into a well.
திருச்சி மாவட்டம், பாண்டமங்கலத்தை சேர்ந்த சத்தியசீலன் மகன் குணா (38). இவர். பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். தினமும், காரில், பெரம்பலூருக்கு வந்து விட்டு, வீட்டிற்கு திரும்பி செல்வது வழக்கம். நேற்றிரவு வேலை முடித்துவிட்டு, வழக்கம் போல் காரில் திருச்சிக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
நேற்றிரவு சுமார் 11 மணியளவில் பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதி உள்ளது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த டீக்கடை முன்பக்கம் மீது மோதி, கிணற்றுக்குள் பாய்ந்தது. கார் கிணற்றுக்குள் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் கார் மோதி அடிப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நள்ளிரவு அந்த வழியாக சென்றவர்கள் அவரின் உடலை பார்த்து, பாடாலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருச்சி மாவட்டம் நெய்குளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பது தெரியவந்தது. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கிருஷ்ணமூர்த்தி இறந்ததாக போலீஸார் கூறினர். ஆனால், இந்த விபத்திற்கு பின்னர், மற்றொரு விபத்து இருப்பது நடந்து இருக்கலாம் என போலீசார் கருதினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த, டீக்கடை முன்பக்கம் உடைந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வாகன மோதி இருப்பதை உறுதி செய்தனர். மேலும், டீக்கடை அருகே இருந்த செடி, கொடிகளும் முறிந்து கிடந்ததால், சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், அப்பகுதியில் இருந்த கிணற்றை எட்டிப்பார்த்தனர். அப்போது கிணற்றில் ஆயில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது, தண்ணீருக்குள் கார் மூழ்கி கிடப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர்தான் கிருஷ்ணமூர்த்தியின் மீது கார் மோதியதும், அந்த கார் தறிகெட்டு ஓடி வந்து, கிணற்றுக்குள் பாய்ந்தது இருக்கும் என உறுதி செய்தனர். கிணற்றில் கிடந்த தண்ணீரை மோட்டர் இறைத்தனர். பின்னர், விபத்து மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், கிரேன் உதவியுடன் காரை, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீஸார் காரை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குணசீலனின் உடல் மீட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த விபத்தை தொடர்ந்து சாலையோரம் திறந்த நிலையில் இருக்கும் கிணற்றிக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். விபத்தில் பலியான குணாவிற்கு மனைவி லீலாஸ்ரீ மற்றும் பிரனவ் சபரி (10) என்ற மகன், சிவானி (6) என்ற மகள் உள்ளனர்.