பெரம்பலூர்: வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை ; கலெக்டர் கற்பகம் தகவல்!

schedule
2024-07-08 | 16:04h
update
2024-07-08 | 16:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Unemployment Allowance; Collector information!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.07.2024 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு தோல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.06.2024 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ.600/-வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.750/- வீதமும் மற்றும் பட்டபடிப்புக்கு மாதம் ரூ.1000/-வீதம் வழங்கப்படும்.

Advertisement

இதர மனுதாரர்களை பொறுத்த வரையில் பள்ளியிறுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200/- வீதமும், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ரூ.300/-வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.400/- வீதமும் மற்றும் பட்டபடிப்புக்கு மாதம் ரூ.600/- வீதம் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும் இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் ஆகஸ்ட்-30ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையள அட்டை மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

மேலும் உதவித்தொகை பெற்றுவரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க ஆகஸ்ட்-30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.01.2026 - 15:43:07
Privacy-Data & cookie usage: