Perambalur: Video of money being collected from farmers at a government direct paddy procurement centre goes viral!
பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டக்குடி அருகே உள்ள காடூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் லஞ்சமாக பெறப்படுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்பழகன், தான் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக காடூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரிடம் 40 கிலோ எடை கொண்ட 137 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், ஒரு மூட்டைக்கு ரூ.40 வீதம் பணம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மொத்தம் ரூ.5,480 தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பணத்தை அங்கு பட்டய கிளார்க்காக பணியாற்றி வரும் கோபி என்பவர் மூலம், காவலாளியாக பணிபுரியும் செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை என்பவரிடம் விவசாயி வழங்கியதாக கூறப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உரங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மயில், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாத்து, கடும் சிரமங்களுக்கு இடையே நெல் சாகுபடி செய்து அறுவடை செய்கிறோம். பின்னர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த பிறகும் பணம் கேட்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், விவசாயிகளிடம் பணம் பெறும் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து, தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்தவிதமான லஞ்சமும் பெறக்கூடாது என அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.