Perambalur: Village women are suffering severely due to lack of public toilet facilities!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தின் வடக்குப் பகுதியில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் கூலி தொழிலாளர்கள். ஒரீரு ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளாகவும், விவசாயக் கூலி தொழிலாளர்களாகவும், பல்வேறு கூலித்தொழில் வேலை செய்பவர்களாகவும், குலத் தொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் அப்பகுதியில் பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொள்ளாமல், எந்த திட்டத்தில் அதிக கமிஷன் கிடைக்குமோ அந்த திட்டங்களை மட்டும் செயல்படுத்துவதில் தீவிர கவனத்தை செலுத்துகின்றனர் என்பதற்கு இப்பகுதியும் ஓர் உதாரணம். அடிப்படை தேவையான சுகாதார கட்டமைப்பிற்கான பொது கழிப்பறை வசதி கட்டினால் நிறைய கமிஷன் கிடைக்காது என்பதால் விளையாட்டு மைதானம், பூங்காக்களை கட்ட அடிப்படை பணிகளை செய்து வருகின்றனர். எனவே, பெண்கள் நலன் கருதி அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் அரசு உடனடியாக கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.