Perambalur: Villagers besiege Minister Sivasankar with empty pots as he goes to perform Bhoomi Puja!
பெரம்பலூர் அருகே பூமி பூஜை போட சென்ற அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று அடிக்கல் நாட்டில் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், வேப்பூர் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் நடைபெற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பூமி பூஜை விழாவில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை அதே ஊரை சேர்ந்த முதியவர் ஒருவர் தண்ணீரே வராத ஊருக்கு எதுக்கு சுத்திகரிப்பு நிலையம் என சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பூஜை போடாதீங்க என தெரிவித்ததோடு, ஓலைப்பாடி கிராமத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதற்கு பூமி பூஜை போடுறீங்க என அமைச்சரிடம் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு அமைச்சர் அதிகாரிகள் இடத்தில் முறையிட வேண்டியது தானே எனக் கூறினார். அதற்கு அந்த முதியவர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அந்த முதிவரை சம்பவ இடத்திலிருந்து போலீசார் தர தர என இழுத்துச் சென்றனர்.
இந்த பிரச்சனையை ஒரு வழியாக சமாளித்த அமைச்சர் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைடுத்து அங்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள் 3 மாதங்களாக முறையாக ஓலைப்பாடி கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பொது மக்களை சமாதானம் செய்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அப்பகுதியில் உள்ள தெருக்களயும், குடிநீர் குழாய்களையும் ஆய்வு செய்து பார்வையிட்டதோடு, தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை விழாவில் பங்கேற்ற அமைச்சரை முதியவர் ஒருவர் உள்ளிட்ட கிராம மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அடுத்தடுத்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.