Perambalur: Vinayagar Chaturthi; idols must be immersed only in the Cauvery River in Trichy; Collector’s announcement!
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர்சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் / பந்தல்கள்களைஅலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப் பூச்சு களை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது, மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகு படுத்த வண்ணப் பூச்சுகள் மற்றும்பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கைசாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்டநிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி தேர்வுசெய்யப்பட்டுள்ள திருச்சி காவிரி ஆற்றில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். மேலும், விவரங்களுக்கு கலெக்டர், போலீஸ் எஸ்.பி ஆபீஸ் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என கலெக்டர் ஷரண்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.