Perambalur: Women Conduct Collective Worship for Global Well-being at Siruvachur Madurakali Amman Temple on the Occasion of Chithirai Full Moon — Sri Chandi Mahayagam!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சென்னை கோட்டூரில் இயங்கி வரும் ஸ்ரீமஹா மேரு மண்டலி சார்பில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமார்ச்சனையும் ஸ்ரீ சண்டியாகமும் நடத்தப்பட்டு வருகிறது.
17-வதுஆண்டு சித்திரை பவுர்ணமி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. மண்டலியின் நிறுவனர் மதுராம்பிகானந்த ப்ரஹ்மேந்த்ர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை தாங்கி பூர்வாங்க பூஜைகளை தொடங்கி வைத்த அவர் கூறியதாவது:
ஹயக்ரீவரால் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் உபதேசிக்கப் பட்டது. இதைப் பாராயணம் செய்தால் சகல வியாதிகளில் இருந்து விடுபடலாம். எல்லாவிதமான செல்வங்களையும் அடையலாம். எல்லாவிதமான பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அமைதியான வாழ்வு வாழலாம். பஞ்சபூதங்களின் செயல்பாட்டை சமநிலைப் படுத்தவும், உணவுப் பொருள்களின் விளைச்சலை அதிக்கப்படுத்தவும், நுண்ணுயிர்களால் ஏற்படும் எல்லாவிதமான வியாதிகளையும் குணப்படுத்தி மக்கள் மகிழ்வுடன் வாழ ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனைக் கருத்தில் கொண்டு உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் சகல நலங்களுடன் வாழ அருள்புரிய வேண்டி கும்ப கலசம் ஆவாகணம் செய்யப்பட்டு கும்ப பூஜைகள் நடைபெற்றன. மதுரகாளிஅம்மன் உற்சவ சிலை வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சித்ரா பவுர்ணமி 2-வது நாளான நேற்று காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீ சண்டி மகாயாகம் நடந்தது. இதில் மண்டலியைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் பங்கேறறு மகாயாகத்தை நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிசேகமும், மகாதீப ஆராதனையும் நிகழ்த்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை மண்டலியின் நிர்வாக அறங்காவலர் நீலா மேற்பார்வையில் மண்டலியைச் சேர்ந்த தேவி உபாசகர்கள், ஆன்மீக தன்னார்வலர்கள் செய்திருந்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.இதில் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமார்ச்சனையும், ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாம குங்குமார்ச்சனையும், அஷ்டகங்கள், ஆயுர் தேவி ஸ்துதிகள் பாராயணமும் செய்தனர். பஜனைகளும் நடந்தன. மதியம் முதல் மாலை வரை நவாவரண பூஜையையும் சண்டி மஞ்சரி பூஜையும் நடைபெற்றன. பூஜையை மண்டலியின் ஆன்மிக தன்னார்வலர்கள் நடத்தி வைத்தனர்.