Pledge to abolish slavery: Acceptance of officers headed by Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியினை கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழித்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கல்குவாரிகள், செங்கல் சூலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அடிக்கடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொத்தடிமைகள் மீட்கப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் அனைத்து அரசு அலுவலர்களும் கொத்தடிமை தொழிலாளர் முறை உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கீழ்கண்ட உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

“இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற்கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என எடுத்துக் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!