Ariyalur student Anita suicide government must take charge! Anbumani

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதயறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி அனிதாவின் தற்கொலை நடந்திருக்கக் கூடாத ஒன்றாகும். அனிதாவின் தற்கொலையை தடுக்கத் தவறியதற்காக சமூகம் வெட்கப்பட வேண்டும். மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் மிகவும் சிறப்பாக படித்து 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் அனிதாவுக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கக்கூடும்.

ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததாலும், நீட் தேர்வில் அனிதா மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததாலும் அவரால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் நிலை இது தான். நீட் தேர்வு குறித்த சரியான புரிதல் கூட ஏற்பட்டிருக்காத அனிதா போன்ற ஊரக ஏழை மாணவர்களை, நகர்ப்புற பணக்கார மாணவர்களுடன் நீட் தேர்வு என்ற பெயரில் போட்டியிட வைத்தால் அவர்களுக்கு தகுதியிருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான் நீட் தேர்வுக்கு எதிராக மிகக்கடுமையாக பாட்டாளி மக்கள் கட்சி போராடியது.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு தற்காலிக விலக்காவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்து கடைசி நேரத்தில் துரோகம் இழைத்தன. அதையும், அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் கிராமப்புற ஏழை மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதேநேரத்தில் துணிச்சலான மாணவி என்று அறியப்பட்ட அனிதா எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதைத் தான் என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால் தம்மைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா இப்படி ஒரு முடிவுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில் இதற்கு சமூகத்தின் தோல்வியும் காரணமாகும்.

உச்சநீதிமன்றத்தில் அனிதா நடத்திய சட்டப் போராட்டம் தோல்வியடைந்ததாலும், அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததாலும் அவருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது தான். மிகவும் கடினமான அந்த சூழலில் அவருக்கு உளவியல் கலந்தாய்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. உலகில் சாதிப்பற்கு எத்தனையோ தளங்கள் உள்ளன என்பதை அவருக்கு உணர்த்தி, அவரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதற்காக ஒட்டுமொத்த சமுதாயமும் குற்ற உணர்வில் தலைகுனிய வேண்டும்.

எப்போதுமே தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு ஆகும். நீட் தேர்வில் தோற்றாலும் கூட, அடுத்த ஆண்டில் அதே தேர்வை வெற்றிகரமாக எழுதி மருத்துவப் படிப்பில் சேர முடியும். மருத்துவம் தவிர ஏராளமான படிப்புகள் உள்ளன என்பதால் இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கை கைவிட வேண்டும். நீட் தேர்வில் தோற்றவர்களுக்கு அரசு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!