I will take steps to bring the railway to Perambalur within my tenure; Parivendar MP confirmed

எனது பதவிக் காலத்துக்குள் பெரம்பலூருக்கு ரயில்பாதை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் உள்ள சின்ன வெங்காயம் கிடங்கு, சிறுவாச்சூர் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை நேற்று பார்வையிட்ட பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உள்ள மக்களை நேரில் சந்தித்து மனு பெற்று வருகிறேன். முதலில் லால்குடி, அதைத் தொடர்ந்து குளித்தலை, இப்போது பெரம்பலூர் சட்டப் பேரவை தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறேன்.

பெரும்பாலும் மக்கள் ரயில்வே தொடர்பான பிரச்சனைகளையே மக்கள் தெரிவித்தனர். பெரம்பலூருக்கு ரயில் பாதை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். இதற்கான முதல் கட்ட ஆய்வு பணி முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன்பு இந்த கோரிக்கை குறித்து ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி, தீர்வு காண முயற்சிப்பேன். என்னுடைய பதவி காலம் முடிவதற்குள் பெரம்பலூருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன்.

விலை குறையும்போது சின்ன வெங்காயத்தை பதப்படுத்தியும், மதிப்பு கூட்டியும் விற்க நடவடிக்கை எடுப்பேன். செட்டிக்குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கை விரிவுபடுத்த மத்திய வேளாண் அமைச்சரிடம் கோரிக்கைவைத்து ஆவண செய்வேன். சின்னவெங்காயம் விலை குறையும்போது பாதிக்கப்படும் விவசாயிகளின்
இழப்பை ஈடுசெய்யும்விதமாக பயிர் காப்பீடு செய்துகொள்ள வலியுறுத்துவேன்.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளாக கட்டப்பட்டுவரும் தரை வழி மேம்பாலத்தை பார்வையிட்டேன். போக்குவரத்து நெரிசலுக்கு விரைந்து தீர்வு காணும்விதமாக இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

செட்டிக்குளம், சிறுவாச்சூர் கோயில்களை புனரமைக்க எனது சொந்த நிதியிலிருந்து ரூ.45 லட்சம் வழங்க உறுதியளித்திருக்கிறேன். மேலும், பள்ளி கட்டிடங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி வந்தவுடன் இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார். அப்போது, ஐ.ஜே.கே கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!