In Kuwait, domestic work for women; Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக முதல்வரின் அறிவுரைபடியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்படியும், வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை தொடர்ந்து வெளிநாட்டில் பணி அமர்த்த பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரநிதிகளை சந்தித்தும் பணிக்காலியிடங்களை சேகரித்தும் வந்ததில் குவைத் நாட்டிலுள்ள Kuwait Gate Foundation என்ற நிறுவனத்திடமிருந்து குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிவதற்கு (Housemaid) 30 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் பணியாளர்கள் 500 நபர்கள் தேவைப்படுவதாக வந்த கடிதத்தின்மேல் உடன் நடவடிக்கை மேற்கொண்டு இதன் தொடர்பாக குவைத்நாட்டின் Kuwait Gate Foundation என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 17.11.2021 அன்று வீட்டுப்பெண் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

வீட்டு பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்த அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.32,000/- மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29,500/- வழங்கப்படும். வயது வரம்பு 30 முதல் 40 வரை இருக்கவேண்டும். மேலும் மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத்நாட்டின் சட்டவிதிகளுக்குட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மாத சம்பளம் தவறாமல் வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் இரண்டு வருடம் வரை நீடிக்கும், ரத்து செய்யாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும். குவைத் நாட்டின் கலாசாரப் பண்புகள் குறித்த கையேடு பணியாளர்களுக்கு அவர்களின் தாய் மொழியில் வழங்கப்படும். பணிபுரியும் இடத்தில் பணியாளருக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்கி கொடுக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியில் சேர விருப்பமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை அணுகுமாறும், இவ்வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட வேலைக்கான விவரங்களை இந்நிறுவனத்தின் வலைதளம் www.omcmanpower.com மூலமாகவும் இந்நிறுவன தொலைபேசி எண்கள் 044-22505886 / 044-22500417 மூலமாகவும் அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!