Mandatory wearing of mask to prevent the spread of omicron virus infection: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர ஆபிசில், பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம், போலீஸ் எஸ்.பி மணி முன்னிலையில், கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடந்தது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

கொரானா தொற்று காரணமாக முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை ஏற்கனவே அனுபவித்து விட்டோம், கொரானா உருமாறும் தன்மையை கொண்டுள்ளது. தற்போது ஓமிக்ரான் வகையாக உருமாறி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நமது மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.

நமது மாவட்டத்தை பொருத்தவரை முதல் தவணை தடுப்பூசி 83 சதவீத நபர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி 50 சதவீத நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நோயிலிருந்து முழுமையாக விடுபட உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இங்கு வருகை தந்துள்ள திருமண மண்டபம், வணிக வளாகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். மேலும் பணிபுரியும் நபர்களுக்கு சானிடைசர் வழங்குவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. அரசு அறிவிக்கும் விதிமுறைகளை பின்பற்றினால் தான் மீண்டும் பழைய நிலைக்கு போகாமல் தவிர்க்க முடியும். எனவே பொதுமக்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், புதிய உருமாறிய ஓமிக்ரான் வகை 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாற்றும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். பொது மக்களின் நன்மையைக் கருதி தடுப்பூசி போடாத பணியாளர்களை பணியமர்த்த கூடாது. தங்களது நிறுவன வளாகத்திற்குள் கொரானா விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். அனைவரும் முழுமையாக ஒத்துழைத்தால் மட்டுமே தற்போதைய நிலை மட்டுமின்றி மேலும் பல தளர்வான நிலையை அடைய முடியும் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, பொது சுகாதார இணை இயக்குநர் செல்வராஜ், துணை இயக்குநர் செந்தில்குமார், திருமண மண்டப பிரதிநிதிகள், வணிக நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!