Perambalur municipality fines basket weaver Rs.1000 for burning garbage

தமிழகத்தில் சில வருடங்களாக உள்ளாட்சி மற்றும் நகர் மன்றத் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது. இதனால் அதிகாரிகளே அனைத்துமாக செயல்பட்டு வந்தனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைக்கும் போல் தெரிகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் கிடைக்கும் மேடைகளில் பேசினாலும் அது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பது உணர வேண்டி உள்ளது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட முத்து நகரில் வசிக்கும் ராஜா மகன் கட்டையன் (70) குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனது குலத் தொழிலான கூடை பின்னி விற்கும் தொழிலை மனது மனைவி உதவியுடன் செய்து விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவருடன் அவர்களது உறவினர்களும் இத்தொழிலை மாவட்டம் முழுவதும் பரவலாக செய்து வருகின்றனர்.

கூடை பின்னுவதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அந்தப் பகுதியில் கிடந்த அசுத்தமான குப்பைகளை தீயிட்டு கொளுத்தினார். உடனே அதிகாரிகள் வந்து எப்படி நீ தீயிட்டு கொளுத்தலாம் என்று இவரை விசாரணைக்கு உட்படுத்தி நகராட்சி அலுவலகத்திற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி கொடுத்தனர்.

மேலும் இதுபற்றி கட்டையன் நம்மிடம் கூறும்போது, நான் கூடை பின்னும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவன். முத்து நகர் பகுதியில் நான் இருக்கும் இடத்தில் கிடந்த குப்பையை கொளுத்தினேன். இந்த குப்பையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக நகராட்சியை சேர்ந்த ஒரு அதிகாரி என்னிடம் நேரில் வந்து திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 இன் படி நகராட்சியால் அப்புறப்படுத்த இயலாத இந்த பகுதியில் கழிவுகளைக் கொட்டுவது துப்புரவு ஆய்வாளரின் நேரடி கள ஆய்வில் தெரியவந்ததால் மேற்கண்ட செயலுக்கு கடந்த 4ம் தேதி நகராட்சி அலுவலகத்துக்கு விசாரணைக்கு காலை பதினொரு மணிக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர்.

விசாரணைக்கு வர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் 1939 ஆம் வருடத்திய பொது சுகாதாரத் திட்டம் விதி எண் 41 முதல் 46 வரை திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2016 இன் படி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு சென்று விட்டார்.



அதன் பிறகு என்னிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டச் சொல்லி அதிகாரிகள் எச்சரித்து வருகிறார்கள். அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு வாழ வழியற்று கூடை பின்னும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் என்னிடம் நகராட்சி அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார் குறவர் சமூகத்தைச் சேர்ந்த கட்டையன்.

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் ஜெய்பீம் என்கின்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அதில் இருளர்கள் மற்றும் குறவர்கள் சமூகத்தின் அவலங்களை தோலுரித்து காட்டப்பட்டது. உடனே ஆண்டு கொண்டு இருக்கின்ற அரசியல்வாதிகள் குறவர்கள் மற்றும் இருளர்களை தேடிச் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். இரண்டு நாட்களில் இந்த செய்தி மறந்து விட்டது. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் வயிற்றுப் பிழைப்பிற்காக படிக்காத பாமரரான கூடை பின்னும் தொழிலாளியை பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தது ஏன் என்பதுதான் தெரியவில்லை.

ஆனால், நகராட்சி நிர்வாகமோ, பாதாள சாக்கடை என்ற திட்டத்தை கொண்டு வந்து நெடுவாசல் பகுதியில் உள்ள நிலத்தடி நீரை மாசடைய செய்தது. பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் இடுகாடு எதிர்புறம் தினந்தோறும், கோழிக்கடைகள் முறையாக கழிவுகளை பண்படுத்தாமல், தீயிட்டு கொளுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் கோழிக்கழிவுகள் அப்படியே கொட்டுவதால் அவ்வழியாக செல்வோர்கள் மூக்கைப்பிடித்து கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதற்கு யார் அபராதம் விதிப்பது என சமூக ஆர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பெரம்பலூ மாவட்டம் முழுவதும், திடக்கழிவு மேலாண்மை முறையாக நடக்கவில்லை என்பதோடு, பெரும்பாலான ஊராட்சிகளில், மக்கும் குப்பை, மக்கா குப்பை என, பிரித்து வாங்குவதில்லை, மேலும், பிளாஸ்டிக் கழிவுகளோடு குப்பைகளையும் தீயிட்டே எரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!