The jallikattu should be conducted under state norms – Perambalur Collector

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற ஜல்லிக்கட்டு விழாவினை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு விழா நடத்த கோரிக்கை விடுத்திருந்த பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் அரசு வகுத்துள்ள விதிமுறைகள் குறித்து ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்தாவது :

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வோர் தங்கள் பகுதியின் வருவாய்த்துறை வட்டாட்சியரிடம் தங்களது பெயரினை பதிவு செய்யவேண்டும். மேலும், தங்களது உடல்தகுதி குறித்து உரிய மருத்துவரிடம் சான்று பெற்று ஆஜர் செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்படவில்லை என்று கால்நடைத்துறையினரால் சான்றளிக்கப்பட வேண்டும். மேலும், அந்த மாடுகள் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்பதனை பரிசோதித்து கால்நடை மருத்துவர் சான்றளிக்கவேண்டும்.

காளைக்கு ஏதேனும் நோய்கள் அல்லது காயங்கள் இருப்பதை கண்டறியப்பட்டால் அந்த காளைகளை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு 20 நிமிடங்கள் ஓய்வளிக்கப்படவேண்டும்.

காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் 60 சதுர அடி அளவில் போதிய இடைவெளி அளிப்பதுடன், பாதுகாப்பாக உணர காளையின் உரிமையாளர் அருகில் இருக்கவேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் இருக்க கூடாரம் அமைத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, நிகழ்வுகள் கண்காணித்து பதிவு செய்யப்படவேண்டும். பார்வையார்களும், சுற்றுப்புறத்தாரும் பாதிக்கப்படாத வகையில் உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு இரண்டு அடுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரி வசதி ஏற்படுத்தப்படவேண்டும்.

காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். வால் மற்றும் காது போன்றவற்றைப் பிடிக்கக்கூடாது.

போட்டி நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும் பொருட்டும். மருத்துவர்களும், ஆம்புலென்சும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தனியே குறிப்பிட்ட வண்ணத்தில் சீருடை வழங்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் 8 அடி உயரத்திற்கு இரண்டு அடுக்கு தடுப்புகளையும் மற்றும் பார்வையார்கள் அமர்ந்து பார்க்கும் கேலரி ஆகியவற்றை பரிசோதித்து அதன் உறதித்தன்மைக்கான சான்று பொதுப்பணித்துறையினரால் வழங்கப்படவேண்டும்.

எவ்வளவு எண்ணிக்கையில் பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட வேண்டும், மேலே அரசு குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளை விழாக்குழுவினர் முறையாக செய்ய வேண்டும்.

எனவே, ஜல்லிக்கட்டு விழா நடத்த விரும்பும் விழாக் குழுவினர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

மேலும், தங்கள் பகுதிக்கு வருவாய்த்துறையினர், காவல்துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினர், தீயணைப்புத் துறையினர் என அரசு அலுவலர்களை உள்ளடக்கிய ஆய்வுக்குழுவினர் சம்மந்தப்பட்ட இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, அரசு விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். எனவே, ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியுள்ள நபர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!