To act quickly on the demands of the public; Perambalur Collector orders!

Photo Credit : Perambalur.nic.in

பெரம்பலூரில், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களின் பணிஆய்வுக் கூட்டம் கலெக்டர்வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தில் அரசின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் வருவாய்த் துறையினரின் பங்கு இன்றியமையாதது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன்தான் உங்களைத் தேடி வருகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் வருகையின் போதும், பெரம்பலூர் மாவட்டத்தைக் கடந்து செல்லும்போதும் அவரிடம் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீதும், அவரின், தனிப்பிரிவில் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீதும் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சரிடம் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள், அமைச்சர் பெருமக்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது அவர்களிடம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து வரும் மனுக்கள் அனைத்திற்கும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை எடுத்த விபரத்தினை அவர்களுக்கு தெரிவித்திட வேண்டும்.

முதியோர் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிக், விதவைகள் உள்ளிட்டோரின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தேசிய அளவிலான தனித்துவமான அடையாள அட்டை கிடைப்பதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினருடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அடையாள அட்டை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயப் பெருங்குடி மக்கள் பல்வேறு கோரிக்கைகள், சிறு-குறு விவசாயிகள் சான்று, பட்டா-சிட்டா உள்ளிட்ட சான்றிதழ்கள் வேண்டி தங்களை அணுகும்போது அவர்களின் கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விடாதா என்ற ஏக்கத்துடன், அரசு அலுவலர்களையே நம்பி வரும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திடும் வகையில் வருவாய்த்துறை அலவலர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து, தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அங்கையற்கண்ணி, சப்-கலெக்டர் நிறைமதி, மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!