Pity near Perambalur; Immersed in the water bath and student well die!
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் – செல்வராணி தம்பதியினர். இவர்களது மகன் முத்தமிழ்ச் செல்வன் (வயது 13). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை பாதுகாப்பிற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சிறுவன் முத்தமிழ்செல்வன் வீட்டில் இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்று மதியம் நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள ரத்தினம் என்பவருடைய விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது, முத்தமிழ்ச்செல்வன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மங்களமேடு போலீசார், வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, பெரம்பலூர் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் தெரிந்த முத்தமிழ்ச்செல்வன் மேலிருந்து குதித்த போது, கிணற்றின் பக்க வாட்டு சுவரில் மோதி, தலையில் அடிபட்டதால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.