Plan to give thousand instead of Pongal gift package in Tamilnadu: Consultation with officials of Chief Minister M.K.Stalin!
வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்காமல் ரொக்கமாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாய விலை கடைகளின் வாயிலாக உணவுப் பொருள் வளங்கள் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்படுத்தியது.
அதன்படி 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடிகள் நடந்ததாக எதிர்க் கட்சியினரும், சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் தராமல், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக பணத்தை தர முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.