நெகிழியும், நெரிசலும் இல்லா தமிழகம் அமையும் நாளே மகிழ்வான பொன்னாள்! பாமக நிறுவனர் ராமதாஸ்

schedule
2019-01-05 | 17:42h
update
2019-01-05 | 17:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Plastics, non-state will be crowded jovial glorious day! The PMK founder Dr. S. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப் பட்ட தடை முழு அளவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு மக்களும் முழுமையான ஆதரவு அளித்து, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கைவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்களுக்கு எல்லையில்லா நன்மைகளைத் தரும் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை விட மோசமான எதிரி இருக்க முடியாது. சோலைவனங்களையும் பாலைவனங்களாக மாற்றும் வலிமை நெகிழிகளுக்கு உண்டு. மக்கும் தன்மையற்ற நெகிழிகள் மண்ணில் புதைவதால் அதன் தன்மையை மாற்றுவதுடன், மழை நீர் பூமிக்குள் இறங்காமல் தடுக்கிறது. நெகிழிக் குப்பைகளை உட்கொள்வதால் மாடுகள், நாய்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றன. சூடான உணவுகளை நெகிழிப்பைகளில் அடைக்கும் போது உருவாகும் வேதிவினை காரணமாக, அந்த உணவை உட்கொள்வோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதனால் தான் நெகிழியை மனிதகுலத்தின் எதிரி என்று நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே எனது முதன்மைக் கனவு ஆகும். நெகிழிப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு உருவாக்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். 2002&ஆம் ஆண்டு ஜூலை 25&ஆம் தேதி பசுமைத்தாயகம் நாளையொட்டி சென்னையில் நெகிழி எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்டேன். நெகிழியின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்பை ஏற்படுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட நெகிழிக் குப்பைகளை சென்னையில் ஓரிடத்தில் கொட்டி, பாதுகாப்பாக அகற்றினோம். 2002 மற்றும் 2012&ஆம் ஆண்டுகளில் பசுமைத் தாயகம் நாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் கடை,கடையாக ஏறி நெகிழி எதிர்ப்பு துண்டறிக்கைகளை வழங்கி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். கடந்த 20 ஆண்டுகளாக நெகிழிப் பொருட்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளது.

Advertisement

2015&ஆம் ஆண்டு ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளில் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை நடத்தப் பட்டது. அதன்பின் 3 ஆண்டுகள் கழித்து 2018&ஆம் ஆண்டு ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளில் நெகிழிப் பொருட்களுக்கு தமிழ்க அரசு தடை விதித்தது. அந்தத் தடை புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆனந்தமளிக்கிறது. நெகிழிப் பைகளை பயன்படுத்திப் பழகிப் போன மக்களுக்கு இது தொடக்கத்தில் சற்று சிரமத்தைக் கொடுத்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இதை மகிழ்ச்சியுடன் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்திச் செய்யும் பொருட்கள் இன்னும் நெகிழி உறைகளில் அடைத்து விற்கப்படுவது சற்று கவலையளிக்கிறது. இதையும் மாற்றி தமிழகத்தில் நெகிழிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் நாளே எனது கனவு நிறைவேறும் நாளாக இருக்கும்.

அதேபோல், சென்னையில் அனைத்து வகையான போக்குவரத்து முறைகளையும் ஒருங்கிணைத்து, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமச் சட்டம் மற்றும் அதற்கான விதிகள், வரும் 16 ஆம் தேதி அறிவிக்கை செய்யப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் கனவுத் திட்டம் தான். 2008&ஆம் ஆண்டு ஏப்ரல் 14&ஆம் தேதி நான் வெளியிட்ட,‘‘சென்னை பெருநகருக்கான மாற்றுப் போக்குவரத்துத் திட்டம்’’ என்ற தலைப்பிலான ஆவணத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பேருந்துகள், தொடர்வண்டிகள், பெருநகரத் தொடர்வண்டிகள், பறக்கும் தொடர்வண்டிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தும், நடைபாதை மற்றும் மிதிவண்டி போக்குவரத்தை மேம்படுத்தியும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. அத்திட்டத்திற்கு தான் பேரவையில் ஆளுனர் உரை அறிவிப்புகள் மூலம் தமிழக அரசு செயல்வடிவம் கொடுத்திருக்கிறது.

இந்தத் திட்டத்தையும், அதிவிரைவுப் பேருந்துப் பாதை திட்டம் (Bus Rapid Transit System – BRTS), சென்னை மாநகர நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தியும், கடல்வழிப் பாதைகள் வழியாகவும் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் தேர்தல் அறிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களும் செயல்வடிவம் பெறும் போது சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாறும். நெகிழிக் குப்பைகளும், போக்குவரத்து நெரிசலும் இல்லாத சென்னை மாநகரம் உருவாகும் நாளே என் இருபதாண்டு கனவு நிறைவேறும் நாளாக அமையும், என தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.03.2026 - 21:43:56
Privacy-Data & cookie usage: