Power Towers in Agricultural Land: KMDK Support for the hunger strike by farmers against protest
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:
விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு அளிப்பதாக தெரவித்துள்ளார்.
விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னரும் மாற்றுவழியை யோசிக்காமல் விவசாய விளைநிலங்கள் வழியே மின் கோபுரங்களை அமைத்து மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நில அளவீடு பணிகளை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விவசாய விளைநிலங்கள் நடுவே மின் கோபுரங்கள் அமைக்கப்படும் போது அப்பகுதிகளில் தென்னை போன்ற உயரமாக வளரும் மரங்களை பயிரிட முடியாது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மின்கோபுரங்கள் அமைக்கப்படும் நிலத்தின் மதிப்பும் குறையும். ஏற்கனவே பல பிரச்சினைகளால் தமிழகத்தில் விவசாயம் அழிந்துவரும் நிலையில் புதியபுதிய திட்டங்களை திட்டமிட்டு விவசாய நிலங்களின் வழியே செயல்படுத்த முயற்சிப்பது வேதனையளிக்கிறது.
புகளூர் முதல் திருச்சூர் வரை மின் கோபுரங்கள் அமைத்து மின் திட்டத்தை கொண்டு செல்ல முதற்கட்ட பணிகளை மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் ஒரு திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு முன்னால் அந்த திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் உள்ள மக்களிடம் கருத்துகளை கேட்காமல் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் திட்டத்தை நிறைவேற்றவது ஏற்புடையதல்ல. காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடத்தில் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும்.
விவசாய விளைநிலங்கள் வழியே மின்கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகளை உடனடியாக நிறுத்தி, மாற்று பாதையில் செயல்படுத்த தமிழக அரசும், தமிழக முதல்வர் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவை அளிக்கிறது, என தெரிவித்துள்ளார்.