பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் இயங்கும் பாமரர் ஆட்சியியல் கூடம் என்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பு, திருவண்ணாமலை அத்தியந்தலில் இயங்கும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் அங்கமான சிறுதானிய மகத்துவ மையத்துடன் இணைந்து வேப்பூர் வட்டார இயற்கை விவசாயிகளின் ‘வரகு’ அறுக்கும் வயல் விழாவை ஒருங்கிணைத்தது.
பி.டி.பருத்தியும், மக்காச் சோளமுமே அதிகம் பயிரப்படும் வேப்பூர் வட்டாரத்தில், சிறுதானியங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்த வட்டார விவசாயிகளை ஈடுபடுத்தியுள்ளது, பாமரர் ஆட்சியியல் கூடம். கடந்த ஏப்ரலில், இயற்கை விவசாய கருத்தரங்குடன் தொடங்கிய இந்த பயணம், இன்று 13 விவசாயிகளை, 20 ஏக்கர் பரப்பளவில், வரகு, குதிரைவாலி, சாமை, தினை, நாட்டுக் கம்பு, இருங்கு சோளம், மாப்பிள்ளை சம்பா, நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிரிடச் செய்துள்ளது.
இந்த வயல் விழாவில் கலந்து கொண்ட சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவர் முனைவர் ஜெயச்சந்திரன், “வரகுடன், கேழ்வரகு, குதிரைவாலி, தினை ஆகிய பயிர்களும் இந்தப் பகுதியில் நன்றாக வளரும். எனவே அவற்றையும் முயற்சி செய்யுங்கள். சிறுதானியங்களுக்கு நல்ல சந்தை மதிப்புள்ளது. மதிப்புகூட்டி பொருட்களை விற்றால் இன்னும் லாபம் வரும். அதற்கான பயிற்சிகளையும் நாங்கள் தரத் தயார்” என்றார்.
மேலும், “விவசாயிகள் தனித்தனியே இயங்கினால் பயனில்லை. அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், அப்படிச் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்” என்றார்.
பேராசிரியர் நிர்மலாகுமாரி, “சரியான காலத்தில் விதைத்து, சரியாக முறையில் பராமரிப்பு செய்தால், வரகு ஏக்கருக்கு 8-10 மூட்டை தரும். இதில் செலவும் குறைவு. நீரும் அதிகம் தேவையில்லை. வேப்பூர் பகுதிக்கு உகந்த மானாவாரிப் பயிர் வரகு. தானியமாகத்தான் விற்க வேண்டும் என்றில்லை. விதைகளாகக் கூட சிறுதானியங்களுக்கு நல்ல சந்தையுள்ளது” என்றார்.
பாமரர் ஆட்சியியல் கூடத்தின் ஒருங்கிணைப்பாளரான சரவணன், “கடந்த 10 மாதங்களில், வரகையும் மற்ற சிறுதானியங்களையும் இங்கு கொண்டு வந்திருக்கிறோம். நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. சிறுதானியங்களுக்கு வெளியில் நல்ல விலை கிடைப்பது ஒருபுறமிருந்தாலும், முதலில் நம் உணவுப் பழக்கத்தில் அவை பயன்படுத்தப் படவேண்டும். நம் குடும்பங்கள் பயன்படுத்தியது போக மீதியைத் தான் சந்தைக்கு விற்க வேண்டும். நம் பெண்களுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும், இதற்காகவே, பாமரர் ஆட்சியியல் கூடம், பாரம்பர்ய உணவுத் திருவிழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், வேப்பூர் வட்டார விவசாயிகள், சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியர்கள் சிவகாமி, காஞ்சனா, ராஜேஷ் மற்றும் பாமரர் ஆட்சியியல் கூடத்தின் கள ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், குரு, வெற்றி மற்றும் அருள் ஆகியோர் பங்கேற்றனர்.