நாளை முதல் தனியார் பால், தயிர் விலை குறைப்பு; தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்பு!

schedule
2024-06-17 | 09:16h
update
2024-06-17 | 09:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Private milk, curd price reduction from tomorrow; Welcome to the Tamil Nadu Milk Agents Workers Welfare Association!

தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி சுமார் 2.25கோடி லிட்டர் என்கிற நிலையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் வெறும் 16 சதவீத்திற்கும் குறைவாகவே கொள்முதல் செய்து, பால், பால் சார்ந்த உபபொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. மீதமுள்ள 84% பாலினை தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு கூட்டுறவு பால் நிறுவனங்கள் பாலினை கொள்முதல் செய்து பால், பால் சார்ந்த உபபொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடப்பாண்டில் பள்ளி, கல்லூரி இறுதியாண்டு தேர்வுக்கு பிறகான விடுமுறை மற்றும் கோடை கால விடுமுறையால் பெரும்பாலான மக்களின் வெளியூர் சுற்றுப்பயணம் போன்ற காரணிகளால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தினசரி பால் மற்றும் தயிர் விற்பனையில் சுமார் 10% முதல் 20% வரை சரிவடைந்துள்ளதாலும், கடந்த மே மாதம் பெய்த தொடர் கோடை மழை காரணமாக தற்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தி கணிசமாக உயரத் தொடங்கியுள்ளதாலும் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி கடந்த மே மாதம் கடைசி வாரம் முதல் லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைத்தது. ஆனால், அதன் பலனை நுகர்வோராகிய பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய வகையில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை குறைக்க முன் வரவில்லை.

Advertisement

(கடந்த மே மாதம் மழை பெய்வதற்கு முன்பு வரை ஒரு லிட்டர் பாலினை 40.00ரூபாய் முதல் 42.00ரூபாய் வரை கொடுத்து கொள்முதல் செய்து கொண்டிருந்த தனியார் பால் நிறுவனங்கள் தற்போது தாங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை கடந்த மே மாதத்தை விட லிட்டருக்கு 10.00ரூபாய் வரை குறைத்து (ஒரு லிட்டர் 30.00ரூபாய் முதல் 32.00ரூபாய் வரை) கொள்முதல் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.)

பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு வெறும் 50காசுகள் உயர்த்தி வழங்கினாலே உடனுக்குடன் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 4.00ரூபாய் வரை உயர்த்தும் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10.00ரூபாய் குறைத்து கொள்முதல் செய்வதால் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை அதற்கு இணையாக குறைக்க வேண்டும் என ஜூன்-3ம் தேதி அனைத்து தனியார் பால் நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை முன் வைத்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஒன்றான ஆரோக்யா (ஹட்சன்) நிறுவனம் நாளை (18.06.2024) முதல் நிறைகொழுப்பு பாலுக்கான (FCM) விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 2.00ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 4.00ரூபாயும் குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விற்பனை விலை குறைப்பு பால் கொள்முதல் விலை குறைப்போடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.

மேலும் இருமுறை சமன்படுத்தப்பட்ட (Double Toned Milk), சமன்படுத்தப்பட்ட (Toned Milk), நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk), நிறைகொழுப்பு (Full Gream Milk) என நான்கு வகையான பால் பாக்கெட்டுகள் விற்பனையில் இருக்கும் போது விற்பனை விலை உயர்வு நேரத்தில் நான்கு வகையான பாலுக்கும் விலை உயர்வு செய்து விட்டு தற்போது நிறைகொழுப்பு பாலுக்கான (Full Gream Milk) விற்பனை விலையை மட்டும் குறைப்பது ஏற்புடையதல்ல.

இருப்பினும் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களுக்கும் முன்னோடியாக பால், தயிர் விற்பனை விலை குறைப்பு செய்யும் ஹட்சன் நிறுவனத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்று, பாராட்டுவதோடு மற்ற வகையான பால் விற்பனை விலையையும் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும் ஹட்சன் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்ற தனியார் பால் நிறுவனங்களுள் அந்தந்த நிறுவனத்தின் பால், தயிருக்கான விற்பனை விலையை குறைக்க முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என அச்சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.01.2026 - 19:34:21
Privacy-Data & cookie usage: