Product of non-standard starch powder near Namakkal: Private Sago Factory Rs. 5 lakh fine

Model
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்ததில் உணவுக்கு உகந்தது அல்லாத பொருள் என்று அறிக்கை வரப்பெற்றால் அவற்றின் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 149 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புகள் மூலமாக இதுவரை 35 லட்சத்து 58 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் ஒரு வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி அருகே செல்வம் என்பவருக்கு சொந்தமான சேகோ பேக்டரில் ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் ஸ்டார்ச் மாவை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார்கள். பகுப்பாய்வு அறிக்கையில் அந்த ஸ்டார்ச் மாவு தரக் குறைவானது என அறிக்கை பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து சேகோ பேக்டரி அதிபர் செல்வம் மீது, நாமக்கல் தீர்ப்பு அலுவலர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரனை நடைபெற்று வந்தது. கோர்ட்டில் விசாரனை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்ட செல்வம் என்பவருக்கு சொந்தமான சேகோ நிறுவனம் தரமற்ற ஸ்டார்ச் மாவை தயாரித்ததற்காக ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த உத்தரவு தரம்குறைவான பொருளை தயாரிக்கும் அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைய வேண்டும் எனவும், கலப்படம் செய்தால் இதற்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை செய்துள்ளார்.
எனவே, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் இனிவரும் காலங்களில் கலப்படம் செய்வதையோ மற்றும் ரசாயணப் பொருட்கள் பயன்படுத்துவதையோ அறவே ஒழித்து சுத்தமான ஜவ்வரிசி தயார் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.