Rs 9.39 crore subsidy for farmers for PM micro-irrigation scheme: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்டபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், 2021-2022ம் ஆண்டில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், கரும்பு, பருத்தி, மக்காசோளம், நிலக்கடலை, பயறு வகைகள் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 1,900 ஹெக்டேர் பரப்பளவில், சொட்டு நீர் பசனம் அமைக்க, ரூ.9.39 கோடி நிதி பெறப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் மூலமாக 1,100 ஹெக்டேர் பரப்பில் சொட்டு நீர் பாசனமும் 800 ஹெக்டேர் பரப்பில் தெளிப்பு நீர் பாசன அமைப்புகளும் நிறுவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களான மக்காச்சோளம், துவரை, தென்னை, பருத்தி, கம்பு பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன கருவிகளும், நிலக்கடலை, பயறு வகைகளுக்கு தெளிப்புநீர் கருவிகளும் மற்றும் மழைத் தூவான் கருவிகளும் 100 சதவீத மானியத்தில் சிறு குறு விவசாயிகள் பெறலாம். குறைந்த அளவு மழை பொழிவு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவால், கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரைக் கொண்டு, நுண்ணீர் பாசனம் மூலம், பயிரின் வேர் பகுதிக்கு மட்டும் நேரடியாக நீரை செலுத்துவதன் மூலம், 30-40 சதவீத நீரை மிச்சப்படுத்தலாம். அதோடு, நீரில் கரையும் உரங்கள் மூலம், 20 சதவீத மகசூல் கூடுதலாக பெறலாம். மேலும், களைகள் கட்டுப்பாடு மற்றும் குறைந்த நீர் பாசன செலவு ஆகியவற்றால் நுண்ணீர் பாசனம் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செலவினையும் குறைக்கலாம். இத்திட்டத்தில், சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, சிறு குறு விவசாயி சான்று, அடங்கல், நில வரைபடம், ரேசன் அட்டை, கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம். அல்லது www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.