Sericulture Seminar: Inaugurated by Collector at Perambalur
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது தொடர்பான கருத்தரங்கினை கலெக்டர் வெங்கடபிரியா புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் கூட்ட அரங்கில் தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சி தொழில் குறித்து நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு முதன் முறையாக நடைபெறுகிறது. நமது பெரம்பலூர் மாவட்டம் ஏற்கனவே மக்காச்சோளம், சின்ன வெங்காயம் போன்ற பொருட்களின் உற்பத்தியில் முதன்மையான மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. தனிமனித வருமானத்தை பெருக்க கூடிய அளவில் குறிப்பாக சிறு,குறு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் பட்டு வளர்ச்சி துறையில் பல்வேறு பயிற்சிகள் உள்ளது. பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் நவீன தொழில்நுட்பம் பற்றி கருத்துக்களை பரிமாறும் வகையிலும், பட்டு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை பட்டு வளர்ச்சி துறை வல்லுநர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.
பட்டு வளர்ச்சி தொழிலில் அனைத்து தொழில்நுட்பங்களையும் உங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, முதல் முறையாக நமது மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியினை இங்கு உள்ள விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்த பண்ணையத்தை நோக்கி பயணிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பட்டு வளர்ச்சி என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. ஒரு வருடத்தில் பத்து மாதங்களுக்கு உங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும். 20 வருடங்களுக்கு முன்பு பட்டு வளர்ச்சி தொழில் செய்த முறைக்கும், தற்போது பட்டு வளர்ச்சி தொழில் செய்பவர்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக அதிக வேறுபாடுகள் உள்ளது. குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் மனித வேலைகள் குறைந்துள்ளது. பட்டு புழுக்களுக்கு உணவளிக்கும் முறைகள் அது வளரும் விதம் ஆகியவை முழுமையாக மாற்றமடைந்துள்ளது. எனவே உறுதியாக பட்டு தொழில் என்பது வருமானத்தை அளிக்கக்கூடிய தொழிலாக உள்ளது. எனவே இன்று நடைபெறும் கருத்தரங்கில் விவசாயிகளான உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெற வேண்டும், என தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் மத்திய பட்டு வாரிய துறை சார்ந்த வல்லுநர்கள் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.