#Small onion with the collapse in the price of purchase: kg. Rs 5, farmers in tears

#பெரம்பலூர் : வெங்காய உற்பத்தியில் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ள பெரம்பலூரில் சின்னவெங்காயம் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் மிக கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக அளவில் பணப்பயிரான சின்னவெங்காயம் அதிகப்படியாக பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுவதால், கடந்த 10 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு சுமார் 16 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் அறுவடைசெய்த வெங்காயத்தை விவசாயிகள் வயல்களிலேயே பட்டறை அமைத்துப் பாதுகாத்து வந்தனர்.

சுற்று வட்டார வியாபாரிகளை வயல்களுக்கே அழைத்து வந்து பேரம்பேசி விற்பதற்கு மாற்றாக மாவட்ட நிர்வாகம் செட்டிக்குளத்தில் வெங்காயத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தது. பின்னர் வாரா வாரம் சின்ன வெங்காய ஏலம் தொடர்ந்து நடந்து வருவதால், பட்டறை அமைக்கும் முறை படிப்படியாக குறைந்து வந்தது. வழக்கமாக பெரம்பலூரில் இருந்து ஒட்டன்சத்திரம், தலைவாசல் பெங்களூர், கோயம்பேடு, கோவை கேரளா, ஸ்ரீலங்கா செல்லும் வெங்காயம் விலை மற்றும் பணமாற்றப் பரிவர்த்தனையால் முடங்கி உள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்தும், தமிழகத்தில் கோவை, பல்லடம், பொள்ளாச்சி, மதுரை, நெல்லை, காரமடை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்தும் தற்போது சின்னவெங்காயம் அதிகமாக வரத்தொடங்கியது. இது உள்ளூர் விவசாயிகளுக்கு பேர திர்ச்சியை அளித்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகள் விவசாயிகளின் வயல்களுக்குசென்று மிகக்குறைந்த விலைக்கு, அதாவது, கிலோ ரூ. 4க்கும், ரூ. 5 க்கும் பேரம் பேசுகின்றனர்.

உழவர் சந்தையில் கிலோ ரூ. 10க்கும், விற்கப்படும் சின்ன வெங்காயம், தினசரி காய்கறி மார்க்கெட்டில் ரூ. 15க்கும், கிராமப்புறங்களில் கிலோ ரூ. 8க்கும் விற்கப்படுகிறது. ஆனால் தங்களிடம் மட்டும் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுகிறார்களே எனப் புலம்புகிற விவசாயிகள் தங்கள் சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்கும் வரை யாருக்கும் விற்காமல், ஏலத்திற்கும் கொண்டுசெல்லாமல், மீண்டும் வயல்களில் பட்டறை அமைத்து தேக்கி வைத்து வெளி வரத்து சீசன் முடிவதற்காக காத்திருந்த விவசாயிகளுக்கு, மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது பொழிய வேண்டிய பருவ மழை பொய்த்துப் போனதனால், அறுவடை செய்து ஐந்தாறு மாதங்களாக வயல்களில் பட்டரை வைத்து பாதுகாத்த பழைய விதை வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்க வேண்டியது ரூ.6 க்கு கூட கொள்வாரில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட சின்ன வெங்காயம் பட்டறைகளில் முடங்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பணப்பரிமாற்றம் காரணமாகவும் வெங்காய கொள்முதலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தை பயிரிட்ட உழவர்களின் கண்களில் தற்போது கண்ணீரை வரவழைத்துள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அறுவடை செய்யும் தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.200 கூலியை கூட வழங்க முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கும் சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News in Tamil - Kalaimalar.

error: Content is protected !!