Soil cards should use #Perambalur farmers – agricultural information.

perambalur_dt_map
#பெரம்பலூர் : மண் வளமே பயிர் வளர்ச்சிக்கு ஆதாரமாகும். மண்ணில் மண் புழுக்கள் மற்றும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் நிறைந்திருந்தால் மட்டுமே மண் ஜீவன் உள்ளதாக கருதப்படும். அத்தகைய மண்ணில் அங்ககச் சத்து அதிகரித்து காணப்படுவதுடன், அம்மண்ணில் விளையும் பயிர்களின் உற்பத்தித்திறனும் அதிகரிக்கும்.

அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்கள் மண்ணில் இடப்படும்போது மண்ணில் உள்ள மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு மண் உயிரற்றதாகின்றது. இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களும் வளர்ச்சி குன்றி பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.

தீவிர பயிர் சாகுபடி மற்றும் அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் தமிழகத்தின் விளைநிலங்கள் மண்வளம் பொதுவாக பாதிக்கப்படுகிறது. மண் அரிப்பு, ஊட்டச்சத்து சமச்சீர்ன்மை, மண் வாழ் உயிரின வகைகள் குறைதல், கனரக உலோகங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மண் மாசுபடுதல், மாறி வரும் பருவ நிலைகளின் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் 1980-ம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச் சத்து 2010-11-ம் ஆண்டில் 0.45 சதவீதமாக குறைந்துள்ளது.

விளை நிலங்களின் மண் வள நிலையினை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிந்து, அதற்கேற்ப பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதால் மட்டுமே இழந்த மண் வளத்தை மீட்கவும் பாதுகாக்கவும் முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டே தமிழக முதலமைச்சரால் 2011-2012-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளின் விளை நில மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடித் திட்டத்தை மேற்கொள்ளவும், பயிர் வாரியான இடுபொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை இடவும், திட்டப் பயன்கள் குறித்து அறியவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டது. மேலும் போதிய அளவு உரமிடவும், பண்ணை மற்றும் பருவ வாரியான உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் குறித்த விபரங்களை பராமரிக்கவும் இந்த கையேடு விவசாயப் பெருமக்களுக்கு பேருதவியாக விளங்கியது.

தமிழகத்தின் இத்திட்டத்தினை முன்னோடியாக கொண்டு பாரத பிரதமரால் சென்ற ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் “மண் வள அட்டை” வழங்கும் திட்டமானது துவக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மண் வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண் வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தினை அறிந்து கொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறிந்து, சீர்திருத்த முறைகளை மேற்கொண்டு, அப்பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய இயலும். மேலும், விவசாயிகள் தங்கள் மண்ணிற்கேற்ற பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்யவும்,

பயிருக்கேற்ற பேரூட்ட மற்றும் நுண்ணுhட்ட உரங்களை இடவும் மண் வள அட்டை பெரிதும் உதவுகின்றது. இரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிக அளவில் தொழு மற்றும் தழை உரம், பசுந்தாள் உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கவும் மண் வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகின்றது. இவ்வாறு தேவைக்கேற்ப அங்கக மற்றும் இரசாயன உரங்களை உபயோகிக்க வழி வகை செய்வதால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்கள் மண்ணில் இடப்படுவது தவிர்க்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகின்றது.

“மண் வள அட்டை” வழங்கும் திட்டமானது தமிழகத்தில் 2015-2016-ஆம் ஆண்டு முதல் செயலாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புவியியல் விபரங்களுடன் கூடிய கட்ட அடிப்படையிலான (இறவை பரப்பில் 2.5 எக்டருக்கு ஒரு மாதிரி மற்றும் மானாவாரிப் பரப்பில் 10 எக்டருக்கு ஒரு மாதிரி) மண் மாதிரிகள் ( Grid Sampling along with GPS Co-ordinates ) சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப் பரிந்துரையுடன் கூடிய மண் வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

உரச் செலவை குறைத்து, உர விரயத்தை தவிர்த்து, விளை நிலங்களின் மண் வளத்தை பேணுவதில் பெரும் பங்காற்றும் இம்மண் வள அட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்து விவசாயிகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மண் வள அட்டையினை பெற்று, அதனை உபயோகித்து, விவசாயம் செய்து, அதிக மகசூல் பெற்று, வேளாண்மையில் அதிக வருமானம் பெற்று பயனடையலாம், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for NEWS - Kalaimalar.

error: Content is protected !!