soil testபெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பிரிவு சாலையிலுள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் (பொ) ஜெ. கதிரவன் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்பொழுது பெய்துள்ள மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவினை மேற்கொள்ளலாம். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் இருக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுவை கட்டுப்படுத்தி மண்ணில் காற்றோட்டம் பெற செய்து, மண்ணில் உள்ள களைகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் நிலத்தின் அங்ககச் சத்தை அதிகப்படுத்தி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் பெருக்கத்திற்கு மட்கிய தொழு எரு, மண்புழு உரம் இவற்றை நிலத்தில் இடலாம். எல்லா வகை மரம், செடி கொடிகளுக்கும் தேவையான எல்லா சத்துக்களையும் தேவையான நேரத்தில் தேவையான அளவில் கொடுக்கக்கூடிய மண்ணை வளமான மண் என்று சொல்லலாம். ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் தன்மை வயலுக்கு வயல் மாறுபட்டு இருக்கும்.

மண் பரிசோதனை செய்தால் எந்தெந்த சத்துக்கள் எவ்வளவு கிடைக்கக்கூடிய அளவில் இருக்கின்றன என்று தொஜீந்து கொண்டு அதற்கு ஏற்ப குறைவாக இருக்கும் சத்துக்களை இயற்கை அல்லது இரசாயன உரங்கள் மூலமாக அளிக்கலாம்.

விவசாயிகள் தங்களது மண்ணின் தன்மை மற்றும் மண்ணில் அடங்கியுள்ள சத்துக்களின் விபரத்தை அறிய மண் பரிசோதனை செய்வது அவசியம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவையில்லாத உரச்செலவைக் கட்டுப்படுத்தலாம்.

மகசூலை அதிகரிக்கலாம் பயிருக்குத்தேவையான சத்துக்கள் முழுமையான அளவில் கிடைக்கச் செய்வதுடன் இயற்கை வளமும் பாதுகாக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை துறை மண் பரிசோதனை நிலையத்தையோ, அல்லது வாலிகண்டபுரம் ரோவர் வேளாண் அறிவியல் மையம் மற்றும் குரும்பலூரிலுள்ள வேளாண்மை துறை மண் பரிசோதனை நிலையத்தை அணுகி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!