தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் : பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-10-06 | 16:14h
update
2022-10-06 | 16:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Speech Competitions for School and College Students by Tamil Development Department : Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-2022- ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பின்படி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி அக்டோபர் 12 ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித் தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகைகள் வழங்கப்படவுள்ளது.

Advertisement

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி 12.10-2022 (புதன்) அன்று, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளிப் போட்டியானது காலை 09.30 மணிக்குத் தொடங்கப்படும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கப்படும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் ஒரு கல்லூரிக்கு இருவர் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிக்கு ஒருவர் என அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000/- வீதம் வழங்கப் பெறவும் உள்ளது. இதே போல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- என்ற வகையில் வழங்கப்படவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரததேசமென்று பெயர் சொல்லுவோம் ஆகிய 04 தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்தியசோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய 06 தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 08:18:31
Privacy-Data & cookie usage: