Steps to increase student enrollment in schools: Government announcement
பெரம்பலூர் : பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய / அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி 01.06.2017 முதல்; 06.06.2017 வரை பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லாத தரமான கல்வி வழங்கப்படுவதை அறியும் விதமாக விளம்பர பேனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணHவு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி, வசதியான காற்றோட்டமான வகுப்பறைகள், போதுமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதை எடுத்துக்கூறியும், அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் குறித்தும், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் பணியில் உள்ளனர் என்ற விபரங்களையும் கிராம மற்றும் நகர்புறங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அறியும்படி ஆட்டோக்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த ஆட்டோ விளம்பரம் ஊராட்சி மற்றும் நகராட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் மேற்கொள்ளப்படும் வகையில் முறையாக அட்டவணைப்படுத்தப்பட்டு சிறப்பாகப் பேசக்கூடிய தேர்ந்த பேச்சாளர், தலைமை ஆசிரியர் / ஆசிரியர் / தன்னார்வலர்களைப் பயன்படுத்தி ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லாத இலவசமான தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதை சமூக ஆர்வமுள்ள அறிஞர்கள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள், திரைக் கலைஞர்களைக் கொண்டு படிப்பிடிப்பு செய்து அதனை திரையரங்ககுள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி பொது மக்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
அரசுப்பள்ளிகளில் அனைத்துவிதமான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துப் பயன்பெறுமாறு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.