Steps to set up more onion storage systems: Perambalur Collector informs at farmers’ grievance day meeting!

பெரம்பலுார் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உழவர்நலன் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்பகிர்மானக்கழகம், பட்டுவளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வேளாண்சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெற விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும், விவசாயத்தில் தற்போதுள்ள விஞ்ஞான முறைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். அதனடிப்படையில், பெரம்பலுார் மாவட்டம் சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளதால் வெங்காய கொட்டகை அமைக்கும் திட்டத்தில் நடப்பாண்டு கூடுதல் கொட்டகைகள் அமைக்க நடவடிக்கை வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முகாம் நடத்திட வேண்டும் என்றும், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள தொகையினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

தோட்டக்கலை துறையின் மூலமாக குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு, சிப்பம் கட்டும் அறை, தேனீ வளர்ப்பு, இயந்திரமயமாக்குதல் போன்ற பணிகளும், தமிழ்நாடு நீர்பாசன வேளாண் நவீன மயமாக்கல் திட்டத்தில் பராம்பரியத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களுக்கு பல்வகைப்படுத்தும் இனத்தில் மிளகாய், சொட்டுநீர் பாசனம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும, விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று நடப்பாண்டில் பெரம்பலுார் மாவட்டத்தில் அதிக அளவிலான வெங்காய சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!