Strict action if fertilizers are sold at extra cost; Perambalur Collector V. Santha

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:


பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1315 டன் யூரியா, 794டன் டி.ஏ.பி., 877டன் பொட்டாஷ் மற்றும் 4448 டன் காம்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உரவிற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும் எனவும், மீறினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. சில்லரை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும் பொழுது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.

சில்லரை உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் பொழுது கட்டாயமாக ஆதார் அட்டைக் கொண்டு கைரேகை பதிவு செய்து உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி இரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு குற்றவழக்கு தொடரப்படும்.

விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும்போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் வாங்க வேண்டும். உரம் வாங்கும் பொழுது உரிய பட்டியல் கேட்டு பெறவேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிக பட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த புகார்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கோ அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

எனவே, பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!