Students can apply for Adi Dravidian and Tribal Welfare Hostels: Perambalur Collector Notification!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கு, மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 03 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் ஆக மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

விடுதிகளில் தங்கி கல்விப் பயில விரும்பும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இலவசமாக 4 இணைச் சீருடைகளும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். இவ்விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவியர்களின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும் பள்ளிக்கும் இடைவெளி 5கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

மாணவ, மாணவியர்களின் சேர்க்கை 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர்கள் http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ, மாணவியர்களுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் 05.07.2022 முதல் 20.07.2022 வரை மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் 18.07.2022 முதல் 05.08.2022 வரை மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பித்தி பயன் பெற கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!