Tamilaga Vivasaigal Sangam (Farmers Association) protest in Perambalur!
மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு சிலை முன்பாக இன்று காலை 38வது நினைவு அஞ்சலிக் கூட்டம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலை முன்பு நடைபெற்றது. அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்திய பின் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்பொழுது முறையாக நடத்தப்படுவதில்லை. அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து துறை அதிகாரிகளும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் முறையாக நடத்திடவும், அதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவும் ஆவண செய்திட தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பதிவு செய்து வாங்குவது போல விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களை தற்பொழுது பதிவு செய்து வாங்குவதில்லை. விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக பதில் கொடுப்பதில்லை. விவசாயிகளின் மனுக்களை முறையாக பதிவு செய்து வாங்கிடவும், சம்மந்தப்பட்ட துறை மூலம் உரிய பதில் வழங்கிடவும் ஆவண செய்திட தமிழக அரசை கேட்டுக் கொள்வதாகவும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த மக்காச்சோளம், பருத்தி மற்றும் வெங்காயம் போன்ற பயிர்கள் வளர்ச்சி குன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக முறையாக கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்கிடவும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,
5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்ய அரசு ஆணை பிறப்பித்தபடி விதிமுறைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்த பட்டியல் சென்னையிலுள்ள கூட்டுறவு பதிவுத்துறை அதிகாரிக்கு அனுப்பியும் உத்திரவு வழங்காதினால் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்படவில்லை. உடனடியாக நகையை திருப்பி வழங்கிட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இந்த நினைவு அஞ்சலி கோரிக்கை முழக்க கூட்டம் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையிலும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன், மாவட்ட பொருளாளர் அ.மணி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் தமிழக விவசாயிகள் சங்க வட்டார பொறுப்பாளர்கள் எம்.எஸ்.ராஜேந்திரன், செல்லக்கருப்பு, சுந்தரராஜன், கிருஷ்ணசாமி, ஜெயபிரகாஷ், நல்லுசாமி, ராஜேந்திரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.