Tamil Nadu Government Achievement Photo Exhibition Closing Ceremony of News Public Relations Department! ( DIPR ) 

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி நிறைவு விழாவில், சிறப்பாக அரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வெங்கடபிரியா கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாலக்கரை பகுதியில், 14.01.2023 அன்று புகைப்படக் கண்காட்சியை பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

நிறைவு நாளான இன்று கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகிய இருவரும் புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டனர். பின்னர், சிறப்பாக அரங்குகள் அமைத்த துறை அலுவலர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியில் ”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி”என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது, பெரம்பலுார் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசுத் திட்டங்களின் தொகுப்பும் புகைப்படங்களாக இடம் பெற்றது.

புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தயாரித்த உணவுப்பொருட்கள், மூலிகைத் தேநீர் பொடி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பாக புத்தகக்காட்சி அரங்கு அமைக்கப்பட்டது. ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, சலுகை விலையில் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் மக்காச்சோளத்தில் செய்யப்படும் உணவுப்பொருட்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், நெகிழி பொருட்களுக்கான மாற்று பொருட்கள் என்னென்ன கிடைக்கின்றது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு அரங்கு, ஆவின் பொருட்களின் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டது.

குறிப்பாக, நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அனைவரும் மஞ்சள் பையினை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு மஞ்சள்பை வழங்கும் வடிவிலான புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த புகைப்படத்தின் அருகில் நின்று பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மஞ்சள் பையினை பெற்றுக்கொள்வது போல ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புகைப்படக் கண்காட்சி அரங்கில், தினந்தோறும் மாலை நேரத்தில் பொதுமக்களின் மனங்கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, அரசு இசைப்பள்ளி, பள்ளி – கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்ட கவிஞர்களின் கவியரங்கம் என 10 நாட்களும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறும் வகையிலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பாரம்பரிய உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும், நெகிழிக்கான மாற்று பொருட்களை விளக்கும் வகையிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியினை குழந்தைகள், பெரியவர்கள் என பொதுமக்கள் பலரும் கண்டுகளித்தனர்.

சிறப்பாக அரங்குகள் அமைத்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களுக்கும், 10 நாட்கள் இக்கண்காட்சி வெற்றி பெற உறுதுணையாக இருந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை, கலை, பண்பாட்டுத்துறை, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம், காவல்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் இந்திராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி, வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் பிரேமா, பூமா, அருணா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!