Tamil Nadu Prevention of Adulteration Act should not be delayed Complete : Milk Agents Association

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:

கடந்த 6மாதங்களில் இந்தியாவின் 29மாநிலங்கள், 7யூனியன் பிரதேசங்களில் விற்பனை செய்யப்படும் பாலில் சுமார் 6432பால் மாதிரிகள் தரப்பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்ததில் 90சதவீதம் பால் மாதிரிகள் பொதுமக்கள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானது எனவும்,

வெறும் 10சதவீதம் பால் மாதிரிகள் மட்டும் தரம் குறைந்திருந்ததாகவும் “உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்” சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி காட்சி ஊடகங்களில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இணையதள ஊடகங்களில் மற்றொரு செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.

அதில் கடந்த அக்டோபர் 8ம் தேதி “இந்திய தரக் கட்டுப்பாட்டுக்கழகம்” வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் “தேசிய அளவிலான பால் கலப்படம் குறித்த ஆய்வு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த ஆய்வில் சலவைக்குப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட்கள் அதிகளவில் கலக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”.

மேலும் “தமிழகம், புதுவை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை விட வட இந்திய மாநிலங்களில் தான் பாலில் அதிகளவில் கலப்படம் செய்யப்படுகிறது”, பாலின் கெட்டித்தன்மைக்காகவும், நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும் யூரியா, குளூகோஸ், பார்மாலின் போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகின்றன எனவும்,

இது போன்ற ரசாயன பொருள்கள் பாலில் கலப்படம் செய்யப்படுவதால் மனிதர்களின் வயிற்றுப்பாகம் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் எனவும், குழந்தைகள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளதோடு,

பாலில் கலப்படத்தைத் தவிர்க்கவில்லை என்றால் “வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 87சதவிகித மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என மத்திய அரசை எச்சரித்துள்ளதாக மற்றொரு செய்தி வெளியாகி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் “இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்” இந்தியாவில் விற்பனையாகும் பாலில் 90சதவீதம் பொதுமக்கள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானது எனவும், வெறும் 10சதவீதம் பால் மாதிரிகள் மட்டுமே தரம் குறைந்திருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் கடந்த அக்டோபர் 8ம் தேதி “இந்திய தரக் கட்டுப்பாட்டுக்கழகம்” வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையோ பால் பொருள்களில் 67 சதவிகிதம் கலப்படம் என்கிற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி பால் கலப்படத்தை தடுக்காவிட்டால் “வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 87சதவிகித மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” எனவும் எச்சரித்துள்ளது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு ஒருவித அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்திய தரக்கட்டுப்பாட்டு கழகத்தின் மேற்கண்ட எச்சரிக்கை இந்திய பால் வணிகத்தை சீர்குலைக்கும் செயலாகவே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பார்க்கிறது.

ஏனெனில் “மது, புகையிலை பொருட்களின் பழக்கத்தினால் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு” வரும் சூழ்நிலையில் கலப்பட பாலை அருந்துவதால் “வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 87சதவிகித மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என அறிக்கை வெளியிட்டுள்ள “இந்திய தரக் கட்டுப்பாட்டுக்கழகத்தின் செயல்பாடுகள் மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பாலில் கலப்படம் தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாக உலவும் செய்திகளின் உண்மை நிலவரத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உறுதி செய்து, மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படத்தை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விரைவில் செரிமானம் ஆகக் கூடிய அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் நடைபெறுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த அதிரப்படை நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்,

பால் கலப்படம் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள சுகாதாரத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு இணையதளம் தொடங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!