Two wheelers face collision near Namakkal Worker kills

நாமக்கல் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி இறந்தார்.
ஜேடர்பாளையம் அருகேயுள்ள பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 59), இறைச்சிக் கடையில் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தார். இவர் சம்பவத்தன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் பிலிக்கல்பாளையத்தில் இருந்து பாண்டமங்கலம் நோக்கி சென்றார். அப்பொழுது எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்க வேலூரைச் சேர்ந்த தேவராஜ் மகன் ரமேஷ் என்பவர் சென்றார்.
பிலிக்கல்பாளையம் அருகே உள்ள வெள்ளைத்தாரை அருகே இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆறுமுகம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.