Tamil Nadu government promises to drop 5th and 8th general Exam’s Cancel the struggle! PMK Preisdent G.K. Mani

பா.ம.க. தலைவர் கோ.க.மணி விடுத்துள்ள அறிக்கை:

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதிக்கும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை (28.01.2020) செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்களை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் அய்யா அவர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். அதையேற்று நாளை பா.ம.க. நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதைக் கேட்ட மருத்துவர் அய்யா அவர்கள், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்றும், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் பொதுத்தேர்வை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டார்.

அதையேற்ற பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் உறுதியளித்தார். பள்ளிக்கல்வி அமைச்சரின் இந்த வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த தொடர்முழக்கப் போராட்டம் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!