The Milk Agents Association requested the police to take action against theft of Milk

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை :

பால் முகவர்களின் கடைகளில் இருந்தும், பால் முகவர்கள் விநியோகம் செய்த சில்லறை வணிகர்களின் கடைகளில் இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக பால் மற்றும் காலி பால் டப்புகள் தொடர்ந்து திருடு போய் வந்தன.

பால் மற்றும் காலி பால் டப்புகள் திருட்டு தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும், திருட்டு சம்பவங்களின் ரகசிய கண்காணிப்பு படக் காட்சிகளை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவும், பால் முகவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாலும் மேற்சொன்ன திருட்டு சம்பவங்கள் வெகுவாகவே குறைந்திருந்தன.

இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் சென்னை, ஏழுகிணறு பகுதியில் உள்ள பால் முகவர் திரு. தினேஷ் என்பவர் விநியோகம் செய்த சுமார் 25லிட்டர் பாலினை சில்லறை வணிகர் கடைக்கு முன்பிருந்து மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

மேலும் சென்னை, கொடுங்கையூர், சிட்கோ பிரதான சாலையில் தனியார் பால் நிறுவனத்தின் பாலகம் நடத்தி வரும் திரு. சஞ்சய் என்கிற பால் முகவரின் கடைக்கு முன் இறக்கி வைக்கப்பட்டிருந்த பாலில் சுமார் 36லிட்டர் பாலினை கடந்த ஜூன் மாதம் (24.06.2018) கடைசி ஞாயிறன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றிருக்கிறார். அந்த நபர் பாலினை திருடும் காட்சிகள் அங்கே பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு படக் கருவியில் (சிசிடிவி) பதிவாகியிருந்திருக்கிறது. இந்த காட்சியின் அடிப்படையில் பால் முகவர் திரு. சஞ்சய் அவர்கள் சென்னை, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் மேற்சொன்ன புகார் அளிக்க சென்ற போது “கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் திருடு போனால் வழக்குப்பதிவு செய்ய முடியாது” எனக் கூறி அவரது புகாரை வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (02.07.2018) அதிகாலையில் அதே பால் முகவர் திரு. சஞ்சய் அவர்களின் கடைக்கு முன் இறக்கி வைக்கப்பட்டிருந்த பாலில் சுமார் 30லிட்டர் பாலினை மீண்டும் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றிருக்கிறார். அந்த மர்ம நபர் பாலினை திருடிச் திருடும் காட்சிகள் அங்கே பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு படக் கருவியில் (சிசிடிவி) பதிவாகியிருக்கிறது.

பால் மற்றும் காலி பால் டப்புகள் திருடு போவது தொடர்பாக தகுந்த ஆதாரங்களோடு பால் முகவர்கள் புகார் அளித்தாலும் காவல்துறையினர் விசாரிப்பதற்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி “கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் திருடு போனால் வழக்குப்பதிவு செய்ய முடியாது” எனக் கூறி பால் முகவர்கள் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் பெற மறுப்பதும், அந்தப் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கப்படும் நிகழ்வுகளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருவது உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி அல்லல்பட்டாலும், சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் முழுமையாக தங்களை தொடர்ந்து ஈடுபடுத்தி வரும் பால் முகவர்களை மிகவும் கவலை கொள்ளச் செய்கிறது.

எனவே “பால் திருட்டு தொடர்பாக உரிய ஆதாரங்களோடு பால் முகவர்கள் அளிக்கும் புகாரினை பெறவோ, வழக்குப்பதிவு செய்யவோ மறுக்கக்கூடாது” என காவல்துறையினருக்கு தமிழ்நாடு “காவல்துறை தலைவர்” அவர்கள் உத்தரவிடுமாறு “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!