perambalur_collectorateமாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக (Assured Maximum service to Marginal people in All villages) அம்மா திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள், ஆண் வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள், குடும்பத்தில் இரு பெண்குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவிகள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக முகாம் நடைபெறும் இடங்களில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

நாளை (ஜன.29) பெரம்பலூர் வட்டத்தில் களரம்பட்டி, வேப்பந்தட்டை வட்டத்தில் பசும்பலூர் (தெ) வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பசும்பலூர் காலனி, குன்னம் வட்டத்தில் எழுமூர்(மே) , ஆலத்தூர் வட்டத்தில் அயினாபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அணைப்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!