The consecration ceremony of the Madurai Meenakshi Sundareswarar Temple falls on an inauspicious Shunya Tithi. This bodes ill for the entire world! — Interview with Anugoolanatha Rajasekara Adigalar.
பெரம்பலூரில், அனுகூலநாத ராஜசேகர அடிகளார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: வருகின்ற 17.09.2026 அன்று மதுரையில் நடக்கவிருக்கின்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் குறித்து எம்பெருமானாகிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவடிகளுக்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றேன்.
இந்த கும்பாபிஷேகம் தொடங்கிய நாள் முதலே அநேக விமர்சனங்களும், போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. நேற்றைய தினம் (இரண்டு நாட்களுக்கு முன்னர்) அங்கு ஒரு தீவிபத்து ஏற்பட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது மனதிற்கு ஒரு அச்சமாக இருக்கின்றது. இந்த கும்பாபிஷேகத்திற்குள் எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதை எம்பெருமானின் திருவடிகளில் விண்ணப்பமாக வைக்கின்றேன்.
குருக்கள்கள் ஆகம முறைப்படிதான் கும்பாபிஷேகப் பணிகளைச் செய்திருப்பார்கள். இருப்பினும், கும்பாபிஷேகத்திற்காகக் குறிக்கப்பட்டுள்ள நாள் “சூனிய திதி”யில் வருகிறது. இது உலகிற்கே நல்லது அல்ல என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதற்குரிய பாரிகாரம் செய்ய வேண்டும் என்றும்,
தமிழ்நாடு முழுவதும் கடந்த 30–40 வருடங்களாகவே நகராட்சி, ஊராட்சிகளில் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்வது போல, இந்த கும்பாபிஷேகத்திலும் சிலர் குத்தகைதாரர்கள் போல நடந்துகொள்வது சிவாச்சாரியார்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் சிவாச்சாரியார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; அவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் உயர்ந்த ஆச்சாரியார்களாகவே இருங்கள், மறுக்கவில்லை. உங்களிடம் பாடம் படித்தவர்களே சிவாச்சாரியார்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டி, அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பளியுங்கள் என்பது எங்கள் விண்ணப்பம்.
ஆகமக் கோயில்களைக் கண்டறிந்து, வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் அனைவரிடமும் ஒரு மந்தத்தன்மை காணப்படுகிறது. ஆகம விதிப்படி உள்ள கோயில்கள் என 40,000 கோயில்களையும் அறிவித்துவிட்டால், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழும். (ஆகமம் இல்லாத கோயில்களில்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும்). எனவே, சிவனடியார்கள் அனைவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
சமயச் சான்றோர்களின் மெளனம்: குருமார்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் சமயச் சான்றோர்கள், இந்து சமயம் குறித்த விமர்சனங்கள் வரும்போதும், ஆகம விவாதங்கள் எழும்போதும் அமைதி காக்காமல் தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் வழக்குகளை இழுத்தடிக்கும் போது, நீங்கள் தலையிட்டுப் பேச வேண்டும்.
கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு மரியாதை பெற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல சமயம் மற்றும் ஆகமம் சார்ந்த விவாதங்கள் வரும்போதும் மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதீனங்களும் மடாதிபதிகளும் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என்பதே அடியேனின் தாழ்மையான வேண்டுகோள் என்றும்,
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்ல நடக்கக்கூடிய கும்பாபிஷேகத்தில் ஓதுவார் மூர்த்திகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும், அவங்களுக்கு உரிய இடத்திலிருந்து அவங்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதையையும் கொடுக்கணும்கிறது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் என தெரிவித்தார்.