The government called for perambalur district farmers to cultivate MILLET

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

சிறுதானியங்களில் முக்கியமான பயிர் வரகு, வரகு பயிரானது தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க பயிர்களில் ஒன்றாகும். கோவில் கலசங்களில் வரகு விதைகளை வைத்து தான் கும்பாபிஷேகம் செய்வார்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகும் கூட கலசங்களில் வைத்த வரகு விதைகளை பயன்படுத்தலாம்.

வறட்சி வரும் காலங்களில் கலசங்களில் வைக்கப்பட்ட வரகு விதைகளை பயன்படுத்தி சாகுபடி செய்ய ஏதுவாக கலசங்களில் வரகு விதைகளை வைத்தனர் நம் முன்னோர்கள். வரகு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. வரகில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன மேலும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாக கருதப்படுகிறது.

வரகு பயிரானது 120 நாள் பயிராகும். ஒரு ஹெக்டருக்கு தேவைப்படும் விதையின் அளவு 10 முதல் 12 கிலோ ஆகும். வரகு பயிருக்கு தண்ணீர் தேவையும் குறைவு, உர செலவும் குறைவு. மானாவாரியில் ஒரு ஹெக்டரில் குறைந்த பட்சம் 1500 கிலோ மகசூல் எடுக்கலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வரகு சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் 2163 கிலோ வரகு விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

வெளி சந்தையில் ரூ.63 க்கு விற்கப்படும் விதை வரகு கிலோ ஒன்று ரூ. 20 மானியம் வழங்கப்படும். வரகு கிலோ ஒன்று ரூ. 43 செலுத்தி விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்

இதுவரை மாவட்டத்தில் 78 ஹெக்டர் பரப்பளவில் வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இன்னும் அதிக அளவில் வரகு சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வரகில் வேப்பூர் வட்டாரத்தில் அத்தியூர் கிராமத்தில் விதைப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விதைப்பண்ணை மூலம் கிடைக்கும் விதைகளை அடுத்த பருவத்திற்கு பயன்படுத்தி வரகு பயிர் சாகுபடியை அதிகரித்துக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!