The Government of India has taken action to protect the fishermen from Sri Lankan law. Anwaraja’s request

இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் பிடியிலிருந்து தமிழக மீனவர்களை காத்திட இந்திய அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தக்க தூதரக
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.பி. அன்வர்ராஜா நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் மத்திய அரசிடம் நேற்று கோரிக்கை வைத்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்கள் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு ரூ. 50 இலட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என்பது உட்பட பல கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும் விதத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஜனவரி 2018 அன்று கொடிய சட்டம் ஒன்றினை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது.

மேலும் இந்த 50 இலட்சம் அபராதத் தொகையினை ஒரு மாத காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் சம்மந்தப்பட்ட மீனவர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் குறித்து கடுமையாக முடிவெடுக்கலாம் என்றும், இதனால் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கே உலை வைத்திடும் நோக்கில் இச்சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இக்கொடிய சட்டம் தமிழக மீனவர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் தத்தமது மீன்பிடித்தொழிலை விட்டுவிட்டு மாற்றுத் தொழில் தேடி இங்கிருந்து வேறிடம் நோக்கிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இக்கொடிய சட்டத்தின் பிடியிலிருந்து மீனவர்களைக் காத்திட இந்திய அரசு உடனடியாக செயல்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் 26.01.18 அன்று பாரதப் பிரதமரிடம் இக்கொடிய சட்டத்தின் பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்து, அவர் உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் தக்க நடவடிக்கைகள் எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுத்தினார். மேலும் இந்த சட்டத்தின் வாயிலாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நீண்ட காலம் சிறையிலடைக்கவும், பெருந்தொகை அபராதமாக விதிக்கவும் முடியும் என்பதால் மீனவர்களின் துயரம் பன்மடங்காக அதிகரிக்கும் என்றும் முதல்வர் விளக்கியுள்ளார்.

தமிழக மீனவர்களின் துயரங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்திய இலங்கை கூட்டமைப்பு எத்தனிக்கும் வேளையில் இலங்கை அரசு இப்படிப்பட்ட மீனவர் விரோத கொடுஞ்சட்டம் இயற்றியுள்ளது துரிதரிஷ்டமாகும். எனவே இலங்கை அரசு கொண்டு வந்துள்ள இக் கொடிய சட்டத்தின் பிடியிலிருந்து தமிழக மீனவர்களை காத்திட இந்திய அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தக்க தூதரக நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!