“The harmful chemicals in private life are not contaminated” The Minister of State for Milk has to resign: The milk agents association

“தனியார் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் இல்லை” குற்றஞ்சாட்டிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் ஆவின் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் “தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்களை கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலினை குடிக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாகவும்” பேசியதோடு நில்லாமல் அதனை உண்மை என மக்கள் நம்பும் வகையில் தொடர்ந்து அவர் பொதுவெளியில் பேசி வந்ததும்,

அது காரணமாக மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வகையில் அமைச்சரின் அடிப்படை ஆதாரமற்ற அந்த பேச்சினை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடுமையாக நாங்கள் எதிர்த்ததையும், அமைச்சரை நாங்கள் எதிர்த்ததால் எங்களை அவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததையும், அதனை நாங்கள் சட்டரீதியாக எதிர் கொண்டதையும், அத்துடன் “ஹட்சன், விஜய், டோட்லா” உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும், அவ்வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதையும் தாங்கள் நன்கறிவீர்கள்.

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்களை கலப்படம் செய்வதாக குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறிய தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து அதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் பணியில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் இறங்கியது.

அதன் முதற்கட்டமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 2017ம் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதிலும் இருந்து எந்தெந்த பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகள் தரப்பரிசோதனைக்காக பெறப்பட்டது? அதனை ஆய்வுக்காக பெற்று அனுப்பிய குறித்த விபரம் என்ன? அந்த மாதிரிகள் எந்தெந்த ஆய்வகங்களுக்கு தரப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது? அதன் மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது அல்லது தரம் குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா? உறுதி செய்யப்பட்டிருந்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பன உள்ளிட்ட சுமார் 11கேள்விகளுக்கான பதில் மற்றும் ஆதாரங்களைக் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 01.12.2017அன்று கடிதம் அனுப்பியதில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலகங்களில் இருந்து சுமார் 24 மாவட்டங்களில் இருந்து எங்களுக்கு வரப் பெற்றுள்ள பதிலில் கடந்த 7ஆண்டுகளில் 714மாதிரிகள் பெறப்பட்டு தரப்பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் ஆவின் நிறுவனத்தின் பால் 4மாதிரிகளும், தனியார் பால் நிறுவனங்களின் 26மாதிரிகளும், சில்லறையாக(Loose) விற்பனை செய்யப்படும் பால் 58மாதிரிகளும், பால் பொருட்கள் 49மாதிரிகளும், முழுமையான விபரமில்லாமல் 35மாதிரிகளும் என மொத்தம் 172மாதிரிகள் தரம் குறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆண்டுகளில் தமிழகத்தின் 6மாவட்டங்களில் இருந்து ஆவின் நிறுவனத்தின் 6பால் மாதிரிகள் மட்டுமே தரப்பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும், அதில் உதகை (2012), அரியலூர், தருமபுரி (2015), சேலம் (2017) ஆகிய 4மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட “ஆவின் நிறுவனத்தின் பால் மாதிரிகள் தரம் குறைந்தவை” என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் 24மாவட்டங்களில் இருந்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள பதிலில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகள் மட்டுமே அதிகளவில் தரப்பரிசோதனைக்காக ஆய்வுக்குட்படுத்தியிருந்தாவும் கூட ஒரேயொரு குறிப்பிட்ட தனியார் (ஹட்சன்) பால் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் அதிகளவில் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது அக்கடிதத்தில் மூலம் தெரிய வருகிறது. அதுமட்டுமன்றி தமிழகம் முழுவதிலும் தரப்பரிசோதனைக்காக பெறப்பட்ட பால் மாதிரிகளில் தரம் குறைந்தவையாக அடையாளம் காணப்பட்டதில் அதிகளவில் சில்லறையாக (Loose) விற்பனை செய்யப்படும் பாலாகவே இருப்பதும் தரப்பரிசோதனை முடிவின் அடிப்படையில் தெரிய வருகிறது.

மேலும் மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு்துறையால் அங்கீகரிக்கப்பட்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6உணவு பகுப்பாய்வு கூடங்களுக்கும் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதிலும் இருந்து எந்தெந்த பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகள் தரப்பரிசோதனைக்காக பெறப்பட்டது? அதன் மாதிரிகளில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் (பார்மலின், ஹைட்ரஜன் பெராக்சைடு, வார்னிஷ், பெயிண்ட் உள்பட) கலப்படம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட சுமார் 12கேள்விகளுக்கான பதில் மற்றும் ஆதாரங்களைக் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 26.03.2018அன்று கடிதம் அனுப்பியதில் தமிழகத்தில் உள்ள 6 பகுப்பாய்வு கூடங்களில் இருந்தும் வரப் பெற்றுள்ள பதிலில் தமிழகம் முழுவதும் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை 7ஆண்டுகளில் 1607மாதிரிகள் பெறப்பட்டு தரப்பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் “தமிழகத்தில் எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களிலும் உயிருக்கு தீங்கிழைக்கும் (பார்மலின், ஹைட்ரஜன் பெராக்சைடு, வார்னிஷ், பெயிண்ட் உள்பட) ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படவில்லை” எனவும், “அனைத்து பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகநிர்வாகத்துறை அதிகாரிகளால் தரப்பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளது” என்கிற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிறகு குறிப்பிட்ட தனியார் பால் நிறுவனங்களை மட்டும் குறி வைத்து கடந்த 2017ம் ஆண்டு 29, 30 மற்றும் 31ம் தேதிகளில் 9தனியார் பால் நிறுவனங்களின் 13பால் மாதிரிகள் தஞ்சாவூர் பகுப்பாய்வகத்திற்கும், 8தனியார் பால் நிறுவனங்களின் 12பால் மாதிரிகள் மதுரை பகுப்பாய்வகத்திற்கும் தரப்ரிசோதனை ஆய்விற்காக தமிழக பால்வளத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வருகிறது. “பொதுமக்கள் அருந்தும் பால் தரமானது தானா?”என்பதை ஆய்வு செய்து அதன் உறுதி செய்ய வேண்டுமானால் “ஆவின், தனியார் பால் நிறுவனங்கள் என்கிற பாரபட்சமின்றி அனைத்து பால் நிறுவனங்களின் மாதிரிகளையும் தமிழக பால்வளத்துறை ஆய்விற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்”. ஆனால் இதிலும் குறிப்பிட்ட சில தனியார் (ஹட்சன், KCபால்) பால் நிறுவனங்களை மட்டும் குறி வைத்து அந்நிறுவனங்களின் பால் மாதிரிகள் தரப் பரிசோதனைக்காக தஞ்சாவூர், மதுரை பகுப்பாய்வகங்களுங்கு அனுப்பியதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்களும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசுதுறை மற்றும் தனியார் பால் நிறுவனங்களும், சில பன்னாட்டு பால் நிறுவனங்களும் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் தமிழர்களின் நிறுவனம் என்பதற்காக குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் நெருக்கடி கொடுப்பதற்காக அந்நிறுவனங்களின் பால் மாதிரிகளை மட்டும் தொடர்ந்து ஆய்விற்கு உட்படுத்துவதையும், ஆவின் அரசுதுறை நிறுவனம் என்பதற்காக சொற்ப அளவில் மட்டுமே அந்நிறுவனத்தின் பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப்பரிசோதனை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் தமிழகத்தில் நாளொன்றுக்கு 1.5கோடி லிட்டர் பால் விற்பனையாகும் சூழ்நிலையில் அதில் 83.4% தேவைகளை (1கோடியே 25லட்சம் லிட்டர்) தமிழகத்துச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசுதுறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் சில பன்னாட்டு பால் நிறுவனங்களும், மீதமுள்ள16.6% தேவைகளை (25லட்சம் லிட்டர்) ஆவின் நிறுவனமும் பூர்த்தி செய்து வருகின்றன. அதுமட்டுமன்றி குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் “உயிர் காக்கக் கூடிய அத்தியாவசியமான உணவுப் பொருளாக விளங்கி வரும் பாலில் எவர் கலப்படம் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது”. என்பதும், தரப்பரிசோதனை என்பது ஆவின், தனியார், பன்னாட்டு பால் நிறுவனங்கள் என்கிற பாகுபாடின்றி, எந்த ஒரு பாரபட்சமுமின்றி நடத்தப்பட வேண்டும்”. என்பதும் சாமானிய மக்களைப் போல் “பால் வணிகத்தை மூச்சாகவே சுவாசித்து வரும் எங்களது கோரிக்கையுமாகும்”.

மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது கடந்த 2017ம் ஆண்டில் தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்திய தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டுகளில் கிஞ்சித்தும் உண்மை இல்லை என்பதும், அவர் கூற்றுப்படி “தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படவில்லை” என்பதும் மத்திய அரசின் உணவு பகுப்பாய்வகங்கள் நடத்திய தரப்பரிசோதனை முடிவுகள் வாயிலாகவும், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளின் தரப்பரிசோதனை ஆய்வு முடிவுகள் வாயிலாகவும் உறுதியாக தெரிய வருகிறது.

எனவே கடந்த ஆண்டில் தவறான தகவல் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்திய தமிழக பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த ஓராண்டில் பால் கலப்படம் தொடர்பாக தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நடைபெற இருக்கும் பால் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், “தனது தவறான செயலுக்கு தார்மீக பொறுப்பேற்று பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” எனவும், அவர் பதவி விலக மறுக்கும்பட்சத்தில் “தமிழக முதல்வர் அவர்கள் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்” எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

மேலும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் “உணவுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து சிறப்பு இணையதளம்” தொடங்கப்படுவதோடு, தமிழகத்தில் விற்பனையாகும் ஆவின் உள்ளிட்ட அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளை மாதந்தோறும் தரப்பரிசோதனை ஆய்விற்கு உட்படுத்தி அதன் முடிவுகளை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு இணையதளத்தில் வெளியிட வேண்டும்” அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் எனவும், “பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனவும் தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் , என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!