பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவன் மர்ம சாவு! பள்ளி சூறை!! சாலைமறியல்!

schedule
2019-02-04 | 05:29h
update
2019-02-04 | 05:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The mysterious death of a private school near Perambalur

பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு கண்ணாடி, டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் அடுத்த காங்கையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உத்தண்டம் – தேன்மொழி தம்பதியினரின் மூத்த மகன் உதயநிதி (வயது 17), இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் நேற்றிரவு செல்போனில் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்த உதயநிதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து சக மாணவர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அறைக்கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்ததோடு, மின் விசிறியில் உதயநிதி சடலமாக தொங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறி அடித்து கொண்டு விடுதி காப்பாளரிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயநிதியின் பிரேதத்தை கைப்பற்ற முயற்சித்தனர்.

இதனிடையே உதயநிதி தூக்கில் சடலமாக தொங்குவதாக தகவலறிந்து அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பள்ளியில் குவிந்தனர். மாணவனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு கண்ணாடி, டேபில், ஷேர், மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடித்து நொறுக்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து போரட்டத்தை கைவிட செய்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அவர்களது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 10:11:26
Privacy-Data & cookie usage: